முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை : எஸ்பியை இடமாற்றம் செய்யக் கோரி வழக்குரைஞர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட காவல்கண்காப்பாளார் ஜே. முத்தரசியை இடமாற்றம் செய்யும் வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக திருவண்ணாமலையில் உள்ள வழக்குரைஞர்கள் இன்று முதல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:20 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட காவல்கண்காப்பாளார் ஜே. முத்தரசியை இடமாற்றம் செய்யும் வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக திருவண்ணாமலையில் உள்ள வழக்குரைஞர்கள் இன்று முதல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை நீதிமன்றத்துக்கு எதிரே கூடிய அட்வகேட் அசோசியேஷன், லாயர்ஸ் அசோசியேஷன், பார் அசோசியேஷன் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நாகநாதன், சில நாட்களுக்கு முன்பு சஸ்பென்ட் செய்ப்பட்டார். அதற்கான உத்தரவை  சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பொன் கலையரசன் பிறப்பித்திருந்தார். இதற்கு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் முத்தரசிதான் காரணம் என்று வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது, நாகநாதன் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். மரியாதை நிமித்தமாக அவரை முத்தரசி வந்து சந்திக்கவில்லை.

சில மாதங்கள் கழித்து நீதிபதியை முத்தரசி சந்திக்க வந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக ஏன் உடனடியாக வந்து சந்திக்கவில்லை என்று கேட்ட நாகநாதன், திருவண்ணாமலையில் காவல்துறையின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. குற்றவாளிகளை சரியாக ஆஜர்படுத்துவதில்லை என்று கண்டித்துள்ளார்.

இதை மனதில் வைத்துக் கொண்டு, நாகநாதன் வீட்டில் இரவுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரிடம், பொய்யான புகாரை வாங்கி முத்தரசி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பேரில் இந்த சஸ்பென்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீதித்துறையிடம் மோதல் போக்கை கடைபிக்கும் எஸ்.பி.யை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாகவும், இந்த போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காத நிலையில், திங்கட்கிழமையன்று மாவட்டத்தில் உள்ள ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி என அனைத்து வழக்குரைஞர்களையும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவும், தொடர்ந்து மாநில அளவில் இப்பிரச்னையைக் கொண்ட செல்லவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.