பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த காவல் நிலையத்திற்கு உள்பட்ட பள்ளிகளில் காவலர்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்ட காவல் துறையும், சைல்டு லைன் நிறுவனம் சார்பிலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் குழந்தைகளுக்கான எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து காவலர்களுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது: குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும்.
எனவே இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதற்காகவே காவலர் மற்றும் பெண் காவலர் ஆகியோர் தனியாக நியமிக்க வேண்டும். அவர்கள் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை மட்டுமே கையாள வேண்டும். இவர்கள் அந்தந்த காவல் நிலைய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நேரடியாகச் சென்று விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். இது போன்றவைகளுக்கு சிறுமி மற்றும் சிறார் பாதுகாப்புக்கான சட்டங்கள்-2012 குறித்து ஒவ்வொரு பிரிவிலும் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறார்களை காவல் நிலையத்தில் வைத்து காவலர் சீருடையோடு விசாரணை செய்தால் பயந்த நிலையை அடையக்கூடும். அதனால், அக்குழந்தைகள் விரும்புகிற இடத்தில் வீடுகளிலே, அரசு பாதுகாப்பகத்திலேயே அன்போடு விசாரணையில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.
சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், ஸ்பீச் தொண்டு நிறுவனத்தின் கவுன்சிலர் எர்ஸ்கின், ஆலோசகர் முருகன் உள்ளிட்டோரும் காவல துறையினர் குழந்தைகளை தொடர்பான பாலியல் குற்றங்கள் கையாளும் போது எதிர்கொள்வது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்த முகாமில் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் காவல சார்பு ஆய்வாளர் மற்றும் பெண் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காவல் துறையும் மற்றும் சைல்டு லைன் தொண்டு நிறுவனமும் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.