தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இங்கிருந்து மாடுகளை கேரளம் கொண்டு செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி களியக்காவிளை வழியாக வெள்ளிக்கிழமை ஏராளமான மாடுகள் கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறையில் செவ்வாய்க்கிழமையும், களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் வெள்ளிக்கிழமையும் மாட்டுச் சந்தைகள் நடைபெறுகிறது. இங்கிருந்து கேரளத்தைச் சேர்ந்த வியாபாரிகளால் மாடுகள் இறைச்சிக்காக வாங்கிச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மாடுகள் கோமாரி நோய் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு மாடுகள் கொண்டு செல்ல அம்மாநில அரசு தடை விதித்தது. மேலும் மறுஉத்தரவு வரும் வரை மாட்டுச் சந்தைகள் செயல்பட வேண்டாம் என தமிழக அரசு அறிவித்ததையடுத்து படந்தாலுமூடு மாட்டுச் சந்தை இரு வாரமாக செயல்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லாரிகளில் கொண்டுவரப்படும் மாடுகள் குழித்துறை, படந்தாலுமூடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து மினி டெம்போக்களில் இரண்டு மாடுகள் வீதம் கேரளத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்டு வந்தது. இதையடுத்து படந்தாலுமூடு மாட்டுச் சந்தைக்கு மாடுகள் கொண்டுவருவதை தடுக்க களியக்காவிளை பேரூராட்சிப் பணியாளர்கள் இருவர் வியாழக்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது இங்கு லாரிகளில் கொண்டுவரப்பட்ட மாடுகளை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து இந்த லாரிகள் களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றாமரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டு, அங்கு வந்த கேரள வியாபாரிகளுக்கு அவை விற்கப்பட்டன. தொழிலாளர்கள் மாடுகளை நடத்தி செறுவாரக்கோணம், செங்கவிளை பகுதி வழியாக கேரளத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் 3 லாரிகளில் கொண்டுவரப்பட்ட மொத்தம் 60-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகாமலும், லாரியில் மாடுகளை கேரளத்துக்கு கொண்டு செல்ல முடியாமலும் ஒற்றாமரம் பகுதியில் இந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.