முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியருகே கோயில் பிரச்னையில் பூசாரி வீட்டில் இருந்த சிலைகள் கைப்பற்றப்பட்டு வருவாய் துறையிடம் ஒப்படைப்பு

பழனி அருகே கணக்கன்பட்டி தலைவாசல் அருகே ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான அருள்மிகு வீரமாத்தியம்மன் கோயில் இருந்தது.  இக்கோயிலுக்கு 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

  பழனி அருகே கோயில் பிரச்னையில் பூசாரியின் வீட்டில் இருந்த சிலைகள் வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

     பழனி அருகே கணக்கன்பட்டி தலைவாசல் அருகே ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான அருள்மிகு வீரமாத்தியம்மன் கோயில் இருந்தது.  இக்கோயிலுக்கு 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  தலைமுறை, தலைமுறையாக வழிபட்டு வந்துள்ளனர்.  இக்கோயிலை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து சிலைகள் கோயிலின் பூசாரியான வீராச்சாமி என்பவர் வீட்டில்  வைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வீராச்சாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட குடும்பங்களை சுவாமி தரிசனம் செய்ய விடாமல் சிலைகள் தன்னுடையது என தெரிவித்து வந்துள்ளார்.  இதுகுறித்து கோயிலுக்கு உரிய குடும்பத்தினர் போலீஸாரிடமும், வருவாய் துறை அதிகாரிகளிடமும் புகார் செய்துள்ளனர்.  இதுகுறித்து பல்வேறு கட்டங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு எட்டப்படவில்லை.  கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அனைவரும் வந்த நிலையில் வீராச்சாமி வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் பூசாரி வீராச்சாமி கோயில் சிலைகள் காணாமல் போனதாக போலீஸார் புகார் செய்துள்ளார்.  இதையடுத்து கோட்டாட்சியர்  சிலைகளை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உத்திரவிட்டார்.  அவரது உத்திரவின் பேரில் ஆயக்குடி போலீஸார் பூசாரி வீராச்சாமி வீட்டுக்கு சென்று பார்த்த போது வீராச்சாமி தலைமறைவான நிலையில் வீடு பூட்டி இருந்துள்ளது.  இதைத் தொடர்ந்து வருவாய்துறையினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே சுவாமி சிலைகள், பூஜைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த பல்வேறு அளவுள்ள திருவாச்சி சிலைகள், ராமர்,சீதை,லட்சுமணர் சிலை, பாட்டன்,பாட்டி, குதிரை சிலைகள், நாகர்சிலைகள், நாகர்தலை படங்கள், அரிவாள், பூஜைப் பொருட்கள், பெட்டிகள் ஆகியன உட்பட மொத்தம் 39 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.  பூசாரி வீட்டின் பூட்டை உடைத்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதால்  மேற்படி கிராமத்தில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.  இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.