ரயில்வே பட்ஜெட்: மத்திய அமைச்சர் வி.நாராயணசாமிக்கு காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் வலியுறுத்தல்
ரயில்வே பட்ஜெட்டில் காரைக்கால் முக்கிய இடம்பெறும் வகையில் ரயில் சேவைகள் இடம்பெறவும், காரைக்கால் ரயில் நிலைய அடிப்படை பிரச்னைகள் தீர்வுக்கும், ரயில் நேர மாற்ற அறிவிப்புகள் இடம்பெறவும் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் காரைக்கால் முக்கிய இடம்பெறும் வகையில் ரயில் சேவைகள் இடம்பெறவும், காரைக்கால் ரயில் நிலைய அடிப்படை பிரச்னைகள் தீர்வுக்கும், ரயில் நேர மாற்ற அறிவிப்புகள் இடம்பெறவும் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் அதன் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெ.சிவகணேஷ் வியாழக்கிழமை கூறியது : காரைக்காலில் கப்பல் துறைமுகம், தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்.ஐ.டி., கேந்திரிய வித்யாலயா, ஓஎன்ஜிசி அலுவலகம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில், பிரெஞ்சு கலாசார பூமி என்ற பெயர்கொண்டதாக இந்திய வரைபடத்தில் காரைக்கால் முக்கிய இடம்பெற்றிருக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி காரைக்காலில் புதிதாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் சென்னை, எர்ணாகுளம் 2 விரைவு ரயில்களும், திருச்சி, தஞ்சாவூருக்கு 2 பயணிகள் ரயில்களும் மட்டுமே சேவையாற்றி வருகிறது. நாகூரிலிருந்து புறப்படும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் காரைக்காலில் இருந்து புறப்படுமென்று கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
பகல் 12.15 மணி முதலே ரயில் புறப்பாடு என்பது காரைக்காலில் இருக்கிறது. காலை குறிப்பாக அதிகாலை நேரத்தில் திருச்சி போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் புதிய ரயில்கள் வேண்டும் அல்லது நாகூரிலிருந்து புறப்படும் ரயிலை நீட்டிப்பு செய்யவேண்டும். பிற்பகல் 3.50 மணிக்கு தென் மாவட்டங்களை கடந்து செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயில் புறப்படுகிறது. இது நாகூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி போன்ற நிலையங்களில் கூடுதல் நேரம் தங்கிவிட்டு, மறுநாள் அதிகாலை எர்ணாகுளம் செல்கிறது. பயண நேரத்தைப்போன்று ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது. இதனால் காரைக்காலில் இது புறப்படும் நேரத்தை மாலை 4.50 மணி என மாற்றம் செய்யவேண்டும். இதன் மூலம் காரைக்காலில் மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பெரிதும் பயன்படுவர்.
காரைக்கால் மாவட்டத்தில் திருமலைராயன்பட்டினத்தில் நிலையம் கட்டப்பட்டு ரயில் நிற்காமல் செல்லும் நிலையை போக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் நிலையத்தில் கழிப்பறை வசதி, கேண்டீன் வசதிகள், ஓட்டுநர்களுக்கான குடியிருப்பு வசதிகள் விரைவாக செய்துத்தரவேண்டும். மதிப்பீடு செய்து முடிக்கப்பட்ட நிலையில் காரைக்கால் - பேரளம் புதிய ரயில்பாதைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். புதுவை மக்களவை உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான வி.நாராயணசாமி இதனை செய்ய உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் வர்த்தகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயனடைவார்கள் என்றார் அவர்.