சிதம்பரம் அருகே வங்கி கொள்ளை முயற்சி: 2 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.1லட்சம் ரொக்கம் தப்பியது
சிதம்பரம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை நள்ளிரவு அம்பாசிடர் காரில் வந்த மர்ம ஆசாமிகள் கேஸ் வெல்டிங்
சிதம்பரம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை நள்ளிரவு அம்பாசிடர் காரில் வந்த மர்ம ஆசாமிகள் கேஸ் வெல்டிங் மெஷினுடன் வந்து கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டதால் மர்மஆசாமிகள் பொருள்களை போட்டுவிட்டு தப்பிஓடிவிட்டனர்.
சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சி.முட்லூரில் கடலூர் செல்லும் மெயின் ரோட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு அம்பாசிடர் காரில் வந்த மர்மஆசாமிகள் கேஸ் வெல்டிங் மிஷினை வைத்து வங்கி கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது பொருள்களை அங்கேயே போட்டுவிட்டு காரில் ஏறி தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து வங்கி கேஷியர் சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மே்லும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பொதுமக்கள் சத்தம் கேட்டு வந்ததால் கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டு வங்கியிலிருந்து ரூ2 கோடி மதிப்பிலான 870 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் தொகை தப்பியது. சம்பவ இடத்தில் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற 2 கேஸ் சிலிண்டர், வெல்டிங் மிஷின், மூன்று முகமூடிகள், கட்டர் மிஷன் உள்ளிட்ட உபகரணங்களை போலீஸார் கைப்பற்றினர். கொள்ளை முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.