பத்து விரல்களில் எழுதப் பழகுங்கள்: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, முத்தியாலுப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, முத்தியாலுப்பேட்டை பள்ளிகள் குழும செயலர் எஸ்.
மாணவர்கள் பத்து விரல்களில் எழுதப்பழக வேண்டும். கணினி யுகத்துக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் வைகைச் செல்வன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, முத்தியாலுப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, முத்தியாலுப்பேட்டை பள்ளிகள் குழும செயலர் எஸ்.கே. தணிகாசலம் வரவேற்றார்.மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்துப் பேசுகையில், விலையில்லா மடிக்கணினியை மாணவர்கள் சரியான முறையில் பயன்படு்ததினால், இந்தியாவின் மிக உயர்ந்த அரசுப் பதவிகளாகக் கருதப்படும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று, ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக வர முடியும். தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று இளம் வயதில் உயர்ந்த பதவிகளை அடைய முடியும். அதற்கான வாய்ப்பாக, கருவியாக இந்த மடிக்கணியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முத்தியால்பேட்டை மேனிலைப் பள்ளி, மருத்துவர் ரத்னவேலு சுப்பிரமணியம் முத்தியாலுப்பேட்டை மகளிர் மேனிலைப் பள்ளி, ஆண்டர்சன் டே பெண்கள் மேனிலைப் பள்ளி, கே.டி.சி.டி. பெண்கள் மேனிலைப் பள்ளி, பச்சையப்பா மேல்நிலைப் பள்ளி, ஆறுமுக நாடார் பெண்கள் மேனிலைப் பள்ளி, எஸ்கேபிடி பெண்கள் மேனிலைப் பள்ளி, தூய காபிரியேல் மேனிலைப் பள்ளி, லேடி வெல்லிங்டன் மேனிலைப் பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 1330 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.மடிக்கணினிகளை வழங்கி பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியதாவது:
பள்ளிக்கல்வியை மேம்படுத்த தமிழக அரசு 14 அம்சத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஏழை,எளிய மாணவர்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார்.அரசு வழங்கும் உதவிகளை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படு்த்திக் கொள்ள வேண்டும்.இரு விரல்களைப் பயன்படுத்தி எழுதுவதே வழக்கம். தற்போதைய காலகட்டம் பத்து விரல்களிலும் எழுத வேண்டிய காலகட்டம். கணினியில் தட்டச்சு செய்வதைத்தான் அவ்வாறு சொல்கிறார்கள். கணினியைப் பயன்படுத்திப் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், திறனை வளர்த்துக் கொள்ளவும் மாணவர்கள் பத்து விரல்களிலும் எழுதிப் பழக வேண்டும்.வாழ்வில் வெற்றி பெற உடல், மனம், அறிவார்ந்த விஷயம் என 3 துறைகளிலும் தகுதி பெற்றிருக்க வேண்டும். அறிவைப் பெருக்க புத்தகங்களைப் படியுங்கள். வாசிக்கும் போதுதான் அறிவின் வாசல் திறக்கும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி இயக்குநர் கு.தேவராஜன், முத்தியாலுப்பேட்டை பள்ளிகள் குழுமத் தலைவர் தங்கராஜ், மாநிலங்களவை உறுப்பினர் பாலகங்கா, சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் டி.ராஜேந்திரன், முத்தியாலுப்பேட்டை மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் வி.குருநாதன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.