மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கை தொடர முடிவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் மூன்றாவது கட்டமாக மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையை தொடர முடிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை அறிவிப்பு செய்யப்பட்டது.மானாமதுரையில் போலீஸ் டி.எ
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் மூன்றாவது கட்டமாக மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையை தொடர முடிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை அறிவிப்பு செய்யப்பட்டது.மானாமதுரையில் போலீஸ் டி.எஸ்.பி வெள்ளத்துரை முன்னிலையில் இதுவரை இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ள ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையின்போது நகரில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதியில் தேரோடும் வீதியில் இருந்த குடியிருப்புகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
மானாமதுரை பேரூராட்சி நிர்வாக அதிகாரியாக இருந்த சஞ்சீவி கடந்த மாதம் 30 ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்ட நிலையில் புதிதாக நிர்வாக அதிகாரி நியமிக்கப்படாததால் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைக்கு தேவைப்பட்ட செலவுக்கு பேரூராட்சி நிர்வாகத்திலிருந்து பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறாமல் தடைபட்டது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும்போது கோழி வியாரிகள் மற்றும் சாலையோர கடை விரிப்பவர்களாலும் சந்தைக்கு வருபவர்கள் நிறுத்தும் பைக் உள்ளிட்ட வாகனங்களாலும் சந்தை நடைபெறும் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பேரூராட்சி பகுதியில் உள்ள இடத்தில் மட்டுமே கோழி வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும், சந்தைக்கு எதிரே யாரும் ரோட்டில் கடை விரிக்கக்கூடாது, சந்தைக்கு வருபவர்கள் சந்தைக்கு எதிரே குறிப்பிட்ட இடத்துக்குள் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என டி.எஸ்.பி வெள்ளத்துரை உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக கோழி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ரோட்டின் ஓரமாக உள்ள பேரூராட்சி அலுவலக பகுதியில் மட்டுமே கோழிகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர். ரோட்டில் கடை விரித்தவர்கள் வைகையாற்றுக்குள் கடைகளை அமைக்கின்றனர். இதனால் தற்போது வாரச்சந்தை வளாகத்தின் எதிர்புறம் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சிரமமின்றி சென்று திரும்புகின்றன.
இதற்கிடையில் தற்போது மானாமதுரை பேரூராட்சி நிர்வாக அதிகாரியாக திருப்புவனத்தில் பணியாற்றி வந்த அமானுல்லா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மூன்றாவது கட்டமாக மானாமதுரை நகரில் எஞ்சியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள டி.எஸ்.பி வெள்ளத்துரை முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள மானாமதுரை தேவர்சிலை பகுதி முதல் ஒன்றிய அலுவலகம் வரையும் நகர் காவல் நிலையம் முதல் கன்னார்தெரு பகுதி வரையும் அழகர் கோயிலைச் சுற்றி தேரோடும் வீதிகளிலும் தாயமங்கலம் ரோட்டிலும் பழைய பஸ் நிலையத்தின் பின்புறத்திலிருந்து ஆதனூர் சாலையிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் டி.எஸ்.பி வெள்ளத்துரை முன்னிலையில் புல்டோசர் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கை தொடர உள்ளது.