மானாமதுரையில் மறியல் : விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கைது
மானாமதுரையில் தபால் அலுவலகம் முன்பு மறியல் செய்த விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரையில் தபால் அலுவலகம் முன்பு மறியல் செய்த விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்கிழமை காலை தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.தங்கமணி உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர். ரேஷன்கடைகளில் கார்டுதாரர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முறையாக செயல்படுத்தி இத் திட்டத்தின் பயனாளிகளுக்கு கூலியாக தினமும் ரூ. 300 வழங்க வேண்டும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக மானாமதுரையில் இச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து காந்திசிலை அருகேயுள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ கே.தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்தையா ஆகியோர் தலைமை தாங்கினார்.
மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதன்பின்னர் போலீசார் மறியல் செய்தவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்தனர்.