பிச்சாவரம், பரங்கிப்பேட்டை பகுதியில் சுற்றுலா மேம்பாடு குறித்து இரு அமைச்சர்கள், வாரியத்தலைவர் ஆய்வு
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுற்றுலா மேம்பாடு குறித்தும், விரிவாக்கப்பணிகள் மேற்கொள்வது குறித்தும் இரு அமைச்சர்கள் மற்றும் சுற்றுலா
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுற்றுலா மேம்பாடு குறித்தும், விரிவாக்கப்பணிகள் மேற்கொள்வது குறித்தும் இரு அமைச்சர்கள் மற்றும் சுற்றுலா வாரியக்கழகத் தலைவர் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழக சுற்றுலா வாரியக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் ஆகியோர் சாமியார்பேட்டை கடற்கரை, கிள்ளை முழுக்குத்துறை, எம்ஜிஆர் திட்டு பிச்சாவரம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு சுற்றுலா மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பிச்சாவரம் சுரபுண்ணைக் காடுகளை படகுசவாரி செய்து பார்வையிட்டனர்.
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்தது: சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் சிறுவர்பூங்கா, வணிகவளாகம், குடில்கள், குடிநீர், கழிப்பறை ஆதியவை அமைக்க திட்டமிடப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பரங்கிபேட்டையில் ரூ.1 கோடி செலவில் படகுகுழாம் புதுப்பிக்கப்படவுள்ளது. மேலும் ரூ.90.83 லட்சம் செலவில் பிச்சாவரத்தில் முழுக்குத்துறை மற்றும் எம்ஜிஆர் திட்டு பகுதியில் படகு குழாம் அமைக்கவும், பிச்சாவரத்தில் ரூ.28.23 லட்சம் செலவில் சிறுவர்பூங்கா, நீருற்று பூங்கா, பார்க்கிங் வசதி அமைக்கவும், ரூ.20 லட்சம் செலவில் மீன்அருங்காட்சியகம் அமைக்கவும், வீராணம்ஏரி தெற்கு நீர் திறக்கும் பகுதியில் ரூ.89 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கவும் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகள் மேற்கொள்வது குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். விரைவில் இப்பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்தார்.
அமைச்சர்களுடன் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), தமிழழகன் (திட்டக்குடி), கிள்ளை பேரூராட்சி தலைவர் எஸ்.வித்யாதித்தன், தமிழ்நாடு சுற்றுலாத்துறை உதவி இயக்குநர் காமராஜ், மக்கள்-தொடர்பு அதிகாரி கு.தமிழ்செல்வராஜன், சிதம்பரம் சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) திருவாசன், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.