வீராணம் ஏரியை ஆழப்படுத்த வேண்டும்: வீராணம்ஏரி உரிமை மையம் வலியுறுத்தல்
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம்ஏரி 905-906ம் ஆண்டுகளில் சோழர் காலத்தில் முதலாம் பராந்தக சோழனால் வெட்டப்பட்டது. ஏரிக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்
கடலூர் மாவட்டத்தில் வறண்டுள்ள நிலையில் உள்ள வீராணம்ஏரியை போர்க்கால அடிப்படையில் ஆழப்படுத்த தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வீராணம்ஏரி உரிமை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அம்மைய ஒருங்கிணைப்பாளர் ரா.காவியச்செல்வன் அரசுக்கு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம்ஏரி 905-906ம் ஆண்டுகளில் சோழர் காலத்தில் முதலாம் பராந்தக சோழனால் வெட்டப்பட்டது. ஏரிக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்யும் மழைநீர் கருவாட்டு, செங்கால் ஓடை வழியாக நீர் வரத்து இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து முதலாம் ராஜேந்திரசோழன் கங்கையை படையெடுத்து வெற்றி பெற்றார். அதனடிப்படையாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலும், சோழங்கன் என்ற ஏரியை வெட்டினார். இந்த ஏரி தற்போது பொன்னேரி என அழைக்கப்படுகிறது. கடந்த 1836ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் சர்ஆர்தர் காட்டன் என்பவர் கீழணையை கட்டி முதன் முதலாக மேட்டூரிலிருந்து காவிரி நீரை பெற்று சேமித்து வீராணம்ஏரிக்கு கொண்டு வர திட்டமிட்டு செயல்படுத்தினார். கீழணையிலிருந்து வடவாறு வழியாக 22 கி.மீ வாய்க்கால் மூலம் ஏரிக்கு நீர் வரத் தொடங்கியது. வீராணம்ஏரியின் பரப்பளவு 35.8 சதுர கிலோ மீட்டராகும். ஏரி மொத்தக் கொள்ளளவு 1.44 டிஎம்சியாக இருந்தது. தற்போது ஏரி தூர்ந்து போய் 0.98 டிஎம்சியாக குறைந்துள்ளது.
ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் சென்னைக்கு விநாடிக்கு 75 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது ஏரி வறண்டு போனதால் அதவும் நிறுத்தப்பட்டது. வீராமம்ஏரி மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பாசனம் பெறுகின்றன. எனவே தமிழகஅரசு ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த பணி கோடை முடியும் வேளையில் கூட தொடங்கப்படவில்லை. எனவே தமிழகஅரசு விவசாயிகளின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரா.காவியச்செல்வன் தெரிவித்துள்ளார்.