திருவண்ணாமலையில் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
திருவண்ணாமலை அருகே காரும் - தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை அருகே காரும் - தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (60). இவர் தனது மனைவி செல்வி (55), மகன் ரவி (38), மருமகள் மஞ்சு (30), பேரன்கள் ஆரியா (5), சூரியா (3) ஆகியோருடன் தனது பூர்வீக கிராமமான வேட்டவலம் அடுத்த இசுக்கழி காட்டேரி கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை காரில் புறப்பட்டார்.
இசுக்கழி காட்டேரி கிராமத்தில் நடைபெறும் குலதெய்வ பூஜை மற்றும் கூழ்வார்த்தல் திருவிழாவில் கலந்து கொள்ள கலியமூர்த்தி குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
வீட்டில் இருந்து புறப்பட்ட கார், திருவண்ணாமலை -வேட்டவலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மாட்டு வண்டியை கார் முந்திச் செல்ல முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இவ் விபத்தில் பேருந்துக்கு அடியில் கார் சிக்கிக் கொண்டது. இந்த இடிபாடுகளில் சிக்கி கலியமூர்த்தி, மஞ்சு, சூரியா, ஆரியா ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். படுகாயமடைந்த கலியமூர்த்தியின் மனைவி செல்வி, மகன் ரவி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்வி உயிரிழந்தார். இதையடுத்து, இவ் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
காரை ஓட்டிச் சென்ற ரவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இவ்விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.