பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் கூட்டம்: ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை சிறப்பு செனட் கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. அரசு சிறப்பு பிரதிநிதியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், சென்னை பல்கலைக்கழக
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை சிறப்பு செனட் கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. அரசு சிறப்பு பிரதிநிதியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரை நியமிக்க கோரி செனட் ஹால் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி தொடர்பாக 11 பிரிவின் கீழ் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்து விளக்கமும், என்ன நடவடிக்கை மேற்கொள்வது குறித்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு தமிழகஅரசு உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவர்மா கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து செனட், சிண்டிகேட் கூட்டத்தை கூட்டி என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள் என்ற கருத்தை அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அபூர்வாவர்மா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பல்கலைக்கழக செனட் ஹாலில் புதன்கிழமை சிறப்பு செனட் கூட்டம் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில் உயர்கல்வித்துறை அரசு செயலர், நிதித்துறை செயலர் ஆகியோரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்து அவர்களது ஆலோசனையும், ஒப்புதலையும் பெற வேண்டும் என்றார். சிறப்பு பிரதிநிதியாக கூட்டத்தில் பங்கேற்ற சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் பேசுகையில் அரசு செயலர் அபூர்வவர்மா தெரிவித்துள்ள நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். பின்னர் அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் கொண்ட கமிட்டி அமைத்து டெண்டர் விடும்போது அந்த கமிட்டி ஒப்புதல் பெற வேண்டும் என துணைவேந்தர் தாண்டவன் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் இணைவேந்தர் பதவி என்பது கவுரவப்பகுதியாகும். அந்த பதவியை தவறாக பயன்படுத்தக் கூடாது. 1948-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு சட்டதிருத்தம் கொண்ட வரவேண்டும் அப்போதைய மாகான அரசு கமிட்டி ஒன்று அமைத்தது. அந்தக்குழு அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனக்கூறியது. ஆனால் மாற்றியமைக்கப்படவில்லை. தற்போதாவது அரசு சட்டத்தை மாற்றி அமைக்க அரசு முன் வந்துள்ளதை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உறுப்பினர் தில்லைசீனு பேசுகையில் தமிழக முதல்வர் ஆண்டு தோறும் நிதியும், சிறப்பு நிதியும் வழங்கி கருணை உள்ளத்தோடு வழங்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும், சட்டப் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பேசுகையில் பல்கலைக்கழகத்தின் மீது அக்கரை கொண்டு தமிழக முதல்வர் நிதிநெருக்கடியை போக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதற்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும், உறுப்பினர்கள் சொன்ன கருத்துகள் பதிவு செய்து, அதனை பரிந்துரை செய்து ஆட்சிமன்றக்குழுவில் வைத்து உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் மொத்தம் 103 உறுப்பினர்களில் சட்டப்பேரவை உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன், நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் உள்ளிட்ட 74 பேர் பங்கேற்றனர்.