முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகள் உருவாக்கிய நிறுவனத்தில் ஏலம்: குவிண்டால் மஞ்சள் ரூ.11,110-க்கு விற்பனை

விவசாயிகளே உருவாக்கிய நிறுவனத்தில் வியாழக்கிழமை நடந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.11,110-க்கு விற்பனை ஆகியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:36 AM
பகிர்:

விவசாயிகளே உருவாக்கிய நிறுவனத்தில் வியாழக்கிழமை நடந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.11,110-க்கு விற்பனை ஆகியுள்ளது.

 தமிழகத்திலேயே முதல்முறையாக விவசாயிகள் இணைந்து உழவன் உற்பத்தி நிலையம் என்றும் நிறுவனத்தை ஈரோட்டில் அண்மையில் தொடங்கினர். மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் மஞ்சள் விற்பனையை முதலில் தொடங்கியுள்ளனர்.

 ஈரோடு பார்க் சாலையில் உள்ள சிடி மில் அலுவலக வளாகத்தில் முதல்முறையாக மஞ்சள் ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்தில் 350 மூட்டைகள் ஏலத்தில் வைக்கப்பட்டிருந்தன. சுமார் 100 விவசாயிகள் பங்கேற்றனர். அதேபோல 23 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று மஞ்சளை ஏலம் எடுத்தனர்.

 இங்கு வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அனைத்தும் கல், மணல் நீக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. ஏலத்தின் முடிவில் அதிகபட்சமாக சேலம் விரலி மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,110-க்கு ஏலம் போனது. கிழங்கு மஞ்சள் ரூ.7,129-க்கு ஏலம் போனது.

 அதேபோல ஈரோடு ரகத்தில் விரலி ரூ.8,261-க்கும், கிழங்கு ரூ.6,812-க்கும் ஏலம் போனது. மஞ்சளுக்கு நியாயமான விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தரம் பிரிக்கப்பட்டு தரமான மஞ்சளை ஏலம் எடுக்க முடிந்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 தொடக்க விழாவில், உழவன் உற்பத்தி நிறுவனத் தலைவர் நல்லசாமி, துணைத் தலைவர் சி.டி.வெங்கடேஸ்வரன், இயக்குநர் என்.சிவநேசன் மற்றும் இயக்குநர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 தொடக்கத்தில் இந்த ஏலம் வாரத்துக்கு ஒருமுறை வியாழக்கிழமை மட்டும் நடைபெறும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் ஆங்காங்கே சேமிப்பு கிடங்குகள் தொடங்கப்பட்டு வியாபாரம் ஆங்காங்கே நடைபெற வழி செய்யப்படும். விவசாயிகள் ஆன்லைன் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் விலைகளை பெற்று ஏலத்தில் பங்கேற்பதற்கான வழிகளும் செய்யப்படும் என்றும் உழவன் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.