முகப்பு
தற்போதைய செய்திகள்

கருணாநிதியுடன் சேர்ந்து திருமாவளவனும் கெட்டுவிட்டார்: நத்தம் விஸ்வநாதன்

கெட்டவனுடன் சேர்ந்ததால், கெட்டுப் போய் விட்டான் என பழமொழி கூறுவார்கள். அதுபோல் கருணாநிதியுடன் சேர்ந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:54 AM
பகிர்:

கெட்டவனுடன் சேர்ந்ததால், கெட்டு போய் விட்டான் என பழமொழி கூறுவார்கள். அதுபோல் கருணாநிதியுடன் சேர்ந்து திருமாவளவனும் கெட்டு போய்விட்டார் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்,

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு களப்பணியாற்றுவது குறித்து சிதம்பரத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் எம்.ஓய்.எம்.பைசல் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் டி.கலியமூர்த்தி தலைமை வகி்த்தார். மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாகமுருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ரா.விஸ்வநாதன் பேசியது:  சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கட்சி வலுவாக இருந்தாலும், 1977-க்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியவில்லை என கூறினார்கள். ஜெயலலிதாவிற்கு எப்போதும் ஒரு ராசி உண்டு. நமது தெய்வமாக வாழ்ந்து வரும் எம்ஜிஆரால் செய்ய முடியாத சாதனையை ஜெயலலிதா சாதித்துள்ளார். எம்ஜிஆர் காலத்தில் சென்னையிலும், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் எம்ஜிஆர் ஆசியோடு சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறச்செய்தும், 10 மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீதத்திற்கும் மேலான வெற்றியை பெறச் செய்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா. முடியாததை எல்லாம் முடித்து காட்டுவர்தான் ஜெயலலிதா. ஆகவே இந்த தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை சென்று ராஜபட்சேவின் விருந்தை சாப்பிட்டுவிட்டு, அவரிடம் நினைவுப்பரிசும் வாங்கிக் கொண்டு வந்தவர். தற்போது ராஜபட்சே இந்தியா வரக்கூடாது என போராட்டம் நடத்துகிறார். கருணாநிதியோடு சேர்ந்து அவரும் வீனாகி போய்விட்டார் என அமைச்சர் ரா.விஸ்வநாதன் தெரிவித்தார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேசியது: கருணாநிதி 4 வருடங்கள் மத்தியஆட்சியில் பங்கேற்று 2ஜி அலைக்கற்றையில் ரூ.1 கோடியே 76 லட்சம் ஊழல் செய்துவிட்டு, தற்போது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸூடன் இருந்தால் ஒரு சீட்டுகூட வெற்றி பெற முடியாது என தனது ஆதரவை வாபஸ் பெற்று நாடகமாடுகிறார். இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொண்டு குவிக்க காரணமாக இருந்தவர் கருணாநிதி. அந்த பழியை போக்க தற்போது நாடகமாடுகிறார். தமிழக மக்களும், உணர்வாளர்களும் ஏமாளிகள் அல்ல. அனைவரும் உணர்ந்துள்ளனர். ஏழ்மை ஒழிய வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெற வேண்டும். கல்வி வளர்ச்சி பெற்றால்தான் நாடு முன்னேறும் என்பதால் நிதிநிலை அறிக்கையில் 16,962 கோடி முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். திமுக அழிந்து போகும் குடும்ப கட்சி. விஜயகாந்த் கட்சி கட்சியே கிடையாது. என தேர்தலில் சுறு, சுறுப்பாக நாம் பணியாற்றி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியது: முதல்வர் ஜெயலலிதா 22 மாத ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 54 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.  நாடாளுமன்றத் தேர்தலுக்குள் 95 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு 2012-13 ஆண்டிற்கு முதல்வர் ரூ.745 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வழங்கி வருபவர் ஜெயலலிதா. கருணாநிதி 50 ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி உள்ளார். மக்கள் அவரை ஏமாற்ற தயாராகிவிட்டனர்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது: தமிழக முதல்வர் ஜெயலலிதா உலகமே பாராட்டும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழக முதல்வரின் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவில் முதல்வர் செயல்பட்டு வருகிறார். கடலூர் மேற்கு மாவட்டம் 2006 தேர்தலில் 2 தொகுதியை கைப்பற்றிய மாவட்டமாகும். அதுபோன்று உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 98 சதவீதம் வெற்று பெற்று சாதனை படைத்த மாவட்டமாக திகழ்க்கிறது. ஜெயலலிதா நினைத்ததை நாம் நிறைவேற்றுவோம். கடலூர், சிதம்பரம் தொகுதியில் வெற்றி நிச்சயம் என எம்.சி.சம்பத் தெரிவித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், தலைமைக்கழக பேச்சாளர்கள் தில்லைகோபி, தில்லை செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள், நகர மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் சிதம்பரம் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.