முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆங்கிலத்தில் தேர்வெழுதுவதை கட்டாயப்படுத்துவது மாணவர்களை பாதிக்கும்: தமிழக மாணவர் முன்னணி

அரசு கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவதை கட்டாயப்படுத்துவது மாணவர்களை பாதிக்கும். எனவே இம்முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழக மாணவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:54 AM
பகிர்:

அரசு கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவதை கட்டாயப்படுத்துவது மாணவர்களை பாதிக்கும். எனவே இம்முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழக மாணவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டப்படிப்பு பயிலும் ஆங்கிலவழி மாணவர்கள் தமிழிலும் தேர்வு எழுதவும், தமிழில் செய்முறை மற்றும் செய்முறைப் பயிற்சி ஆகிய செய்யலாம் என தற்போதுள்ள அனுமதி வரும் கல்வி ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என்றும், இம்மாணவர்கள் தேர்வையும், செய்முறை பயிற்சியையும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு கல்லூரிகளில் பி.காம், பிஎஸ்சி., பி.ஏ படிப்புகளில் ஆங்கில வழிப்பிரிவு மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதுவதற்கும். செய்முறை பயிற்சியை தமிழில் எழுதுவதற்கும் வாய்ப்பிருந்தால்தான் கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதி பட்டம் பெற முடியும். இச்சமூகங்களிலிருந்து வரும் ஆசிரியர்களும், ஆங்கிலமும் தமிழும் கலந்து வகுப்பு நடத்த வாய்ப்பிருப்பதால்தான் அவர்களும் பாடம் நடத்த முடிகிறது. அனைத்தையும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற தமிழக அரசு உயர்கல்வித்துறையின் இந்த ஆணை 80 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் தடுத்து, தாழ்வு மனப்பான்மையில் தள்ளிவிடும்.

தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை தமிழ் வழியில் நடத்துவது்ம், ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக பயில ஆங்கில இலக்கியம் படித்த ஆசிரியர்களை கொண்டு வகுப்பு நடத்துவதும்தான் அறிவியல் வழிபட்ட, ஜனநாயகக் கல்வி முறையாக இருக்க முடியும். அப்படியிருப்பினும் அது முழு அளவில் செயலுக்கு வராததால் பட்டப்படிப்பு மாணவர்கள் ஆங்கில வழி வகுப்பில் இருந்தாலும், தமிழ் வழியில் தேர்வு எழுதவும், செய்முறை பயிற்சி செய்யவும் அனுமதிக்கப்பட்டு இந்த இடைக்காலத்திற்கு ஏற்ற ஏற்பாடக இருந்தது. இதனை முற்றிலும் ஆங்கிலத்துக்கு மாற்றுவது, பெரும்பாலான மாணவர்களுக்கு கல்வி மறுக்கும் செயலாக அமையும் என வே.சுப்பிரமணியசிவா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.