முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலத்தில் காணாமல் போன முன்னாள் ரௌடி சடலமாக மீட்பு

அம்மாப்பேட்டையை அடுத்த வடக்கு கிருஷ்ணன் புதூர், சத்யா நகரைச் சேர்ந்தவர் கூல் ரங்கநாதன் (எ) ரங்கநாதன் (74). சேலத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி வரதனின் கூட்டாளியாக இருந்த இவர், கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த

Updated On : 27 மே, 2013 at 6:23 PM
பகிர்:

சேலத்தில் காணாமல் போன முன்னாள் ரௌடி சடலமாக இன்று மீட்கப்பட்டார். அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக 4 இளைஞர்களை வீராணம் காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அம்மாப்பேட்டையை அடுத்த வடக்கு கிருஷ்ணன் புதூர், சத்யா நகரைச் சேர்ந்தவர் கூல் ரங்கநாதன் (எ) ரங்கநாதன் (74). சேலத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி வரதனின் கூட்டாளியாக இருந்த இவர், கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த ரங்கநாதனுக்கு செல்லம்மாள் என்ற மனைவியும் வடிவேல், கண்ணதாசன் என்ற மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

ரங்கநாதனுக்கு பச்சப்பட்டியைச் சேர்ந்த அப்சரா பானு (41) என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிய ரங்கநாதன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன்கள் வீராணம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாநகரம் முழுவதும் ரங்கநாதனைக் காணவில்லை என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், காவல்துறையும் அவரைத் தேடி வந்தது.இந்த நிலையில் ரங்கநாதனின் செல்பேசி அழைப்புகளை வைத்து விசாரித்ததில் கடைசியாக அப்சரா பானுவுடன் அவர் பேசியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்சரா பானு, இவரது மகன் பாஷா (எ) பாதுஷா மைதீன் (23) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

இதில் பாஷா, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரங்கநாதனை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. தனது தாயாருடன் உள்ள தொடர்பை வைத்து ரங்கநாதனிடம் பணம் கேட்டு மிரட்ட திட்டமிட்ட பாஷா, கடந்த 19-ம் தேதி அவரை வீட்டுக்கு வரவழைத்து மிரட்டியுள்ளார். இதனால் ரங்கநாதனுக்கும் பாஷாவுக்கும் இடையே தகராறு நடைபெற்றுள்ளது.அதில் ஆத்திரம் அடைந்த பாஷா, நண்பர்கள் உதவியுடன் ரங்கநாதனை கொலை செய்து தலை, உடலை துண்டுத் துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் அவற்றை ஒரு சாக்குப் பையில் போட்டு கிச்சிப்பாளையம் குருவிப்பனை ஏரியை ஒட்டியுள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கிணற்றின் அருகில் கிடந்த ரங்கநாதனின் தலை உள்ளிட்ட சில அழுகிய நிலையிலான பாகங்களை காவல்துறையினர் இன்று கைப்பற்றினர். இதை வைத்து இறந்தது ரங்கநாதன் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து பாஷா, இவரது நண்பர்கள் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த உதயகுமார் (23), பூவரசன் (22), பச்சப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் (22) ஆகியோரை வீராணம் காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களிடம் ஆய்வாளர் சுப்பிரமணியம் விசாரணை நடத்தி வருகிறார்.

ரங்கநாதன் அணிந்திருந்த நகை, அவர் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றையும் அதே கிணற்றில் வீசிவிட்டதாக பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவற்றையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.