முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கை : டாஸ்மாக் கடைகளில் லட்சக்கணக்கில் பண மோசடி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் தமிழகத்திலேயே அதிகமாக லட்சக்கணக்கில் விற்பனைப் பணம் கையாடல் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனையாகாத சரக்குகளை திருப்பி ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:41 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் தமிழகத்திலேயே அதிகமாக  லட்சக்கணக்கில் விற்பனைப் பணம் கையாடல் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனையாகாத சரக்குகளை திருப்பி ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் விற்பனையாகாத சரக்குகள் குவிந்து வருகின்றன. மேலும் தொடர்ந்து மதுக் கடைகளில் நடந்து வரும் தணிக்கையில் முறைகேடு தொடர்பாக மேலும் பல கடைகளின் மேற்பார்வையாளர்கள் சிக்குவார்கள் என டாஸ்மாக் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 186 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக் கடைகளில் விற்பனை கணக்குகளை தணிக்கை செய்ய தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் கடைகளுக்குச் சென்று கணக்குகளை தணிக்கை செய்து வந்தனர்.

தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தில் மட்டும்தான் இந்தளவுக்கு டாஸ்மாக் கடைகளில் பணம் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மோசடி நடந்துள்ள கடைகளின் மேற்பார்வையாளர்கள் தங்கள் கடைகளில் உள்ள மதுப் பாட்டில்களை விற்பனை செய்துவிட்டு தணிக்கைப் பிரிவு ஊழியர்கள் தணிக்கை செய்ய வரும்போது விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்கள் விற்பனையாகாமல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி விற்பனைப் பணத்தை கையாடல் செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்கு தனியார் தணிக்கை நிறுவன ஊழியர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த மோசடி சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் ஏற்கனவே மாவட்ட டாஸ்மாக் நிறுவன அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பணியாற்றியவர்கள் அவர்களது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிதாக அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந் நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு மதுக்கடைகளிலும் படிப்படியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த மோசடி சம்பவங்களில் அந்தந்த கடைகளின் மேற்பார்வையாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளது ஆய்வின்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து இம் மாவட்டத்தில் நடந்துள்ள டாஸ்மாக் கடை விற்பனைப் பணம் மோசடி சம்பவம் தொடர்பாகவும் இனி கடைகளில் நடத்தப்படும் ஆய்வில் பண மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த கடைகளின் மேற்பார்வையாளர்கள் தான் முக்கியமாக சிக்குவார்கள் எனவும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் மோசடி சம்பவம் எதிரொலியாக மாவட்டம் முழுவதுமுள்ள மதுக்கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் நிறுவன மேலாளர் அலுவலகத்திலிருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதுக்கடையிலும் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை (90 நாட்கள்) விற்பனையாகாமல் உள்ள மதுப்பாட்டில்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் மதுப்பாட்டில்கள் இருப்பு காட்டி விற்பனைப் பணம் மோசடி நடந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் 186 டாஸ்மாக் மதுக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் தங்கள் கடைகளில் மூன்று மாதங்களாகவும் அதற்கு மேலாகவும் விற்பனையாகாமல் உள்ள சரக்குகளை வேன்களில் ஏற்றிக்கொண்டு சென்று சிவகங்கை டாஸ்மாக் நிறுவன மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இவ்வாறு ஒப்படைக்கப்படும் மதுப் பாட்டில்கள் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டு அதற்கான பணத்தை திருப்பி பெற டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.