முகப்பு
தற்போதைய செய்திகள்

இறந்த கால்நடைகளுக்கு நஷ்டஈடு வழங்க மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ கோரிக்கை

கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:43 PM
பகிர்:

கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:-

 தமிழகஅரசு பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புறங்களில் பொருளாதாரத்தை உயர்த்தவும் விலையில்லாத ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பரவி வரும் கோமாரி நோய் மற்றும் வாய்ப்புண் நோயினால் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல விலை உயர்ந்த மாடுகள் இறந்து வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோயில், புவனகிரி, கீரப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் பல நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் நோயினால் திடீரென சுருண்டு விழுந்து இறந்துள்ளன. இதே போன்று நாகை, திருவாரூர் மற்றும் பல மாவட்டங்களில் நோய் வேகமாக பரவி பல ஆயிரம் மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என விலைமதிப்புள்ள மாடுகள் இறந்துள்ளதால் சம்பந்தப்பட்ட விவசாய குடும்பங்கள் பெரிதும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும் சில இடங்களில் மாடுகள் இறந்தவுடன் போதிய விபரம் இன்மையினால் பிரேத பரிசோதனை செய்யாமல் மாடுகளை மக்கள் புதைத்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை அரசின் கணக்கெடுப்பில் வராமல் உள்ளது. எனவே கால்நடைகளுக்கு பரவிவரும் நோயை கட்டுப்படுத்தவும், நோய் பாதித்த கால்நடைகளை முழுமையாக குணப்படுத்திடவும் உரிய மருத்துவ சிகிச்சை ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். இறந்த கால்நடைகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி உரிய நஷ்டஈடு வழங்கிட வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.