நில மோசடி: ஓய்வுபெற்ற சார் பதிவாளர் உள்பட 4 பேர் கைது
அம்பாசமுத்திரத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்து மோசடி செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சார் பதிவாளர், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது
அம்பாசமுத்திரத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்து மோசடி செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சார் பதிவாளர், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் திலகர்புரம் பிரதான சாலையை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் ராமசாமி (75). இவருக்கு சொந்தமான நிலம் அம்பாசமுத்திரம் அருகே மேலஅம்பாசமுத்திரம் கிராமத்தில் 1.75 ஏக்கர் நிலங்கள் உள்ளது. மேற்படி நிலத்தில் ராமசாமி விவசாயம் செய்து வருகிறார்.இதனிடையே அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளத்தை சேர்ந்த ராமசாமி மகன் கருத்தபாண்டி (50). அம்பாசமுத்திரம் வேலாயுதம்நகரை சேர்ந்த நெல்லையப்பன் மகன் ஓய்வுபெற்ற சார்பதிவாளர் ஆதிமூலம் (63).
கருத்தபாண்டியும், ஆதிமூலமும் சேர்ந்து ராமசாமி பெயரில் உள்ள நிலத்தை கருத்தபாண்டியின் தந்தை ராமசாமிக்கு சொந்தமானது என போலியாக ஆவணங்கள் தயாரித்து, அவர் இறந்து விட்டதால் கடந்த 02.05.2012 அன்று வாரிசு நிலைமையில் கருத்தபாண்டி, ஆதிமூலம் மனைவி செல்வி பெயருக்கு விற்பனை ஆவணம் தயாரித்து அம்பாசமுத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனராம்.விற்பனை ஆவணத்தை அப்போதைய சார் பதிவாளர் சச்சிதானந்தம் பதிவு செய்தாராம். பத்திரத்தில் கருத்தபாண்டி மனைவி முப்புடாதி, ஆதிமூலம் மகன் கயல்குமார் ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர். நிலம் தனக்கு சொந்தமானது என ஆதிமூலம் தெரிவித்தாராம்.
அதிர்ச்சியடைந்த சொத்தின் உரிமையாளர் ராமசாமி திருநெல்வேலி எஸ்.பி. யிடம் புகார் செய்தார். இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கருத்தபாண்டி, ஓய்வுபெற்ற சார் பதிவாளர் ஆதிமூலம், அவரது மனைவி செல்வி, மகன் கயல்குமார் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் சச்சிதானந்தம், கருத்தபாண்டி மனைவி முப்புடாதி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.