சிதம்பரம் அருகே வெள்ளாறு அரிப்பெடுத்து ரயில்பாதை பாதிக்கும் அபாயம்: அச்சத்தில் கிராம மக்கள்
சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாறு அரிப்பெடுத்து திசைமாறி திரும்பியதால் அருகாமையில் உள்ள விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான அகல ரயில்பாதை பாதிக்கும் அபாயம்
சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாறு அரிப்பெடுத்து திசைமாறி திரும்பியதால் அருகாமையில் உள்ள விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான அகல ரயில்பாதை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே மடுவங்கரை எனுமிடத்தில் ரயில்பாதையிலிருந்து 1915-ல் 1400 மீட்டர் தூரம் இருந்தது. பின்னர் 1930-ல் 600 மீட்டர் தூரமானது. 1970-ல் 30 மீட்டரும், 2005-ல் 3.5 தூரமானது. தற்போது வெள்ளாறு அரிப்பெடுத்து திசை மாறி ரயில்பாதை மிக அருகே நெருங்கியுள்ளது. இதனை தடுக்காவிடில் மயிலாடுதுறை- விழுப்புரம் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
வெள்ளாற்றின் அரிப்பினை தடுக்க பொதுப்பணித்துறை சார்பில் 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக ரூ.92 லட்சம் செலவில் பனமரத்தடுப்பு மற்றும் மணல் மூட்டைகள் அமைத்து தடுப்பு அமைக்கப்பட்டது. தற்போது அத்தடுப்புகளும் வெளாற்றின் அரிப்பில் சேதமுற்றதால் கடந்த சில தினங்களாக மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு அமைக்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இருப்பினும் நிரந்தரமாக இதற்கு தீர்வு இல்லையெனில், மீண்டும் வெள்ளாற்றில் ஒரு வெள்ளம் வந்தால் ரயில்பாதை அடித்துக் கொண்டு செல்லும் நிலை ஏற்படும். ரயில்பாதை மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீர் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.