முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளரை மணல் கடத்தல் கும்பல் கொலை செய்ய முயற்சி

பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி துணை வட்டாட்சியர் வீரபத்திரன் தலைமையில் திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்,தலையாரிகள் பாண்டி மற்றும் சின்னகருப்பு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:51 PM
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற 4 பேர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி துணை வட்டாட்சியர் வீரபத்திரன் தலைமையில் திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்,தலையாரிகள் பாண்டி மற்றும் சின்னகருப்பு ஆகியோர் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பகுதிகளில் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்ய செவ்வாய்கிழமை சென்றனர்.

தனக்கன்குளம்,வேடர்புளியங்குளம் பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த அவர்கள் சாக்கிலிபட்டி சென்று கொண்டிருந்தபோது எதிரே கிராவல் மண் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.அதனை துணை வட்டாட்சியர் வீரபத்திரன் நிறுத்தியுள்ளார்.லாரி நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் விரட்டி பிடித்தனர்.பின்பு அதில் இருந்த கிராவல் மண் குறித்து கேட்டபோது அதற்கான ரசீது இல்லாததை அடுத்து துணை வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளரை உடன் சென்று லாரியை தாலுகா அலுவலகத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டு நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து லாரியில் தலையாரி பாண்டியை ஏற்றிவிட்டு அதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சென்றுள்ளார்.சாலையில் சென்ற லாரியை டிரைவர் திடீர் என சின்னசாக்கிலிபட்டி காட்டுப்பாதைக்குள் திருப்பி சென்று அங்கு லாரியில் இருந்த மண்ணை கொட்டியுள்ளார்.இதனை பின் தொடர்ந்து சென்ற வருவாய் ஆய்வாளர் தனது செல் போனில் படம் பிடித்தாராம்.இதையடுத்து அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி கொல்ல முயற்சித்துள்ளனர்.

இதில் வருவாய் ஆய்வாளருக்கு சிறிது காயம் ஏற்பட்டதாம்.மேலும் வந்த கும்பல் அவரது செல்போனையும் எடுத்துக்கொண்டு கொலை செய்துவிடுவோம் என மிரட்டி லாரியுடன் சென்றுவிட்டனராம்.இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆஸ்டின்பட்டி போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரியின் உரிமையாளர் டி.எம்.டி.ராஜா,அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன்,விஜயகுமார் மற்றும் லாரியின் டிரைவர் ஆகியோர் மீது கொலை முயற்சி,கனிமவள திருட்டு,கொள்ளை ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.