சிதம்பரத்தில் ஆட்டோ கட்டணம் அதிகம்: மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுமா!
சிதம்பரம் நகரில் ஆட்டோக்களும் அதிகரித்துள்ளது. கட்டணமும் அதிகரித்துள்ளது. சென்னை நகரில் அமல்படுத்தப்பட்டது போல் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டு அரசு நிர்ணயித்த புதிய கட்டணம்
சிதம்பரம் நகரில் ஆட்டோக்களும் அதிகரித்துள்ளது. கட்டணமும் அதிகரித்துள்ளது. சென்னை நகரில் அமல்படுத்தப்பட்டது போல் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டு அரசு நிர்ணயித்த புதிய கட்டணம் வசூலிக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கோவில் நகரமும், பல்கலைக்கழக நகரமுமான சிதம்பரம் நகரம் உள்ளது. இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளதால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் பயிலுகின்றனர். பல்கலைக்கழகத்தில் 4 ஆயிரம் ஆசிரியர்களும், ஊழியர்கள் 12 ஆயிரம் பேரும் பணியாற்றுகின்றனர். இவையல்லாமல் நேரடியாக சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இதனால் சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. இதனால் நகரில் போக்குவரத்திற்கு பெரும் சவாலாக ஆட்டோக்கள் திகழ்கிறது. நகரில் பஸ் நிலையம் மற்றும் நான்கு வீதிகளிலும் ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பினால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து வழக்குப் போடும் போக்குவரத்து காவலர்கள், ஒருவழிப்பாதையை கடைபிடிக்காத ஆட்டோக்களை கண்டு கொள்வதே இல்லை.
சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதிகளில் ஆட்டோ கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்படவில்லை. சிதம்பரம் பஸ் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள நடராஜர் கோயிலுக்கு செல்ல ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு செல்ல ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பஸ் நிலையத்திலிருந்து தில்லைஅம்மன் கோயிலுக்கு செல்ல ரூ.60-ம், அம்மாப்பேட்டை செல்ல ரூ.60-ம், ஓமக்குளம் செல்ல ரூ.70-ம், பச்சையப்பன் பள்ளி சந்திப்பிற்கு செல்ல ரூ.60-ம் வசூலிக்கப்படுகிறது. சிதம்பரம் நகரிலிருந்து ரயில் நிலையத்திற்கு செல்ல ரூ.60 வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளும், பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே வட்டார போக்குவரத்து துறையினர் சென்னை நகரில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தப்பட்டு அரசு நிர்ணயித்த புதிய கட்டணம் வசூலிக்கப்படுவது போல் சிதம்பரம் நகரிலும் செயல்படுத்த வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.