நகர்மன்றத் தலைவி, உறுப்பினர்களிடையே பனிப்போர்: வி.கே.புரத்தில் வளர்ச்சிப் பணிகள் தேக்கம்
விக்கிரமசிங்கபுரத்தில் நகர்மன்றத் தலைவி, துணைத் தலைவர், உறுப்பினர்களிடையே கருத்தொற்றுமை இல்லாத காரணத்தால் 2 மாதங்களாக நகர்மன்ற கூட்டம் நடக்கவில்லை. இதன் காரணமாக வளர்ச்சிப் பணி மேற்கொள்வதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விக்கிரமசிங்கபுரத்தில் நகர்மன்றத் தலைவி, துணைத் தலைவர், உறுப்பினர்களிடையே கருத்தொற்றுமை இல்லாத காரணத்தால் 2 மாதங்களாக நகர்மன்ற கூட்டம் நடக்கவில்லை. இதன் காரணமாக வளர்ச்சிப் பணி மேற்கொள்வதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விக்கிரமசிங்கபுரம் நகர்மன்றத்தில் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். 21 வார்டுகளை கொண்டது. நகர்மன்றத் தலைவியாக இ. மனோன்மணி (அதிமுக), துணைத் தலைவராக தி. கணேசபெருமாள் (அதிமுக) உள்ளனர். 21 உறுப்பினர்களில் துணைத் தலைவர் உள்பட 15 பேர் அதிமுக சார்பிலும், 3 பேர் திமுக சார்பிலும், 3 பேர் சுயேட்சையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு அதிமுகவுக்கு இருப்பதால் நகரின் வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் பல லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நகர்மன்ற 9 வது வார்டு உறுப்பினரும், நகர முன்னாள் அதிமுக செயலருமான கே.பி.எஸ்.எஸ். பாண்டியனுக்கும், தலைவி மனோன்மணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதற்கிடையே நகர்மன்ற பணியாளர்கள், தலைவி, துணைத் தலைவர் உள்ளிட்ட மன்றத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு எழுந்தது. இதில் நகர்மன்ற பணியாளர் ஒருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தலைவி, துணைத் தலைவர், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள். இதனிடையே அண்மையில் விக்கிரமசிங்கபுரத்தில் எம்.எல்.ஏ, பங்கேற்ற நகர்மன்ற விழாவில் தலைவி மனோன்மணி பங்கேற்காமல் புறக்கணித்தார். துணைத் தலைவர், உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அதன் பிறகு தலைவி ஒரு அணியாகவும், துணைத் தலைவர், அதிமுக உறுப்பினர்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனராம். இதனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மன்ற கூட்டம் நடத்தப்படவில்லை.
உறுப்பினர்கள் நகர்மன்ற கூட்டத்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்தும் தலைவி கூட்டத்தை நடத்த முன்வரவில்லை என புகார் எழுந்துள்ளது. நகரில் நிலவும் குடிநீர், தெருவிளக்கு பிரச்னை தொடர்பாக விவாதிக்க நகர்மன்ற கூட்டத்தை கூட்ட மறுக்கும் தலைவியின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து நகரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதன் மூலம் தலைவி மற்றும் துணைத் தலைவர், உறுப்பினர்களிடையே நிலவும் பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நகர்மன்றக் கூட்டம் நடத்தப்படாததால் நிர்வாகத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நகர்மன்ற மாதாந்திர வரவு செலவுகள், திட்டப்பணிகளுக்கு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்ட நிர்வாக ரீதியான பணிகள் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.