நெல்லை அருகே 40 ஆட்டுக்குட்டிகள் திடீர் சாவு: கோமாரி நோயா? விவசாயிகள் கலக்கம்
திருநெல்வேலி அருகே கிடையில் அடைத்து வைத்திருந்த 40 செம்மறி ஆட்டுக் குட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தன. கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே கிடையில் அடைத்து வைத்திருந்த 40 செம்மறி ஆட்டுக் குட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தன. கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல், ஆலங்குளம், ரெட்டியார்பட்டி, கடையம், மேலப்பாளையம், பாவூர்சத்திரம், தென்காசி பகுதியில் இயங்கி வந்த ஆடு, மாடுகள் விற்பனைச் சந்தைகள் மூடப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் தாக்கி வருகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருநெல்வேலி அருகே சீவலப்பேரி அரியகுளத்தில் ஆட்டுக் கிடையில் அடைத்து வைத்திருந்த 40 செம்மறி ஆட்டுக்குட்டிகள் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தன.
அரியகுளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மேலகுளத்தில் ஆட்டுக் கிடை அமைத்து அங்கு சுமார் 2,000 ஆடுகளை அடைத்து வளர்த்து வருகின்றனர். இந்த கிடையில் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் பால் குடித்த பிறகு 40 ஆட்டுக் குட்டிகளை தனியாக ஒரு பட்டியில் அடைத்து வைத்திருந்தனராம்.
செவ்வாய்க்கிழமை பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 40 ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. வழக்கமாக கார்த்திகை மாதத்தில் ஆடுகளுக்கு நீல நாக்கு நோய் தாக்குவதுண்டு. ஆனால் இந்த ஆட்டுக்குட்டிகள் இறக்க என்ன காரணம் என தெரியவில்லை.
கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மேலகுளம் கிராமத்திற்கு சென்று இறந்த ஆட்டுக் குட்டிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஒரே சமயத்தில் 40 ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.