சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: தடயவியல் அறிவியல் துறையினர் ஆய்வு
சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை ஆவணங்கள் அறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்து குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை தடயவியல் துறை உதவி இயக்குநர் டி.சண்முகம் மற்றும் நகர போலீஸார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூட்டியிருந்த ஆவணங்கள் அறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவே மர்மமான முறையில் உள்ளுக்குள் திடீரென தீப்பிடித்தது. இதில் ஆதிதிராவிட நல வட்டடாட்சியர் அலுவலக ஆவணங்கள், நிலஎடுப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புகள், ஆதிதிராவிடநலத்துறை பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஆவணங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை எரிந்து சேதமுற்றன.
மின்சார இணைப்பு இல்லாத பூட்டியிருந்த ஆவணங்கள் அறையில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை கடலூரிலிருந்து மாவட்ட காவல்துறை தடயவியல் துறை உதவி இயக்குநர் டி.சண்முகம் தீவிபத்து ஏற்பட்ட அறையினை ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் உடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement