முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலத்தில் காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (35). வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (30). இவர்களது

Updated On : 1 அக்டோபர், 2013 at 7:01 PM
பகிர்:

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் சிறுவன், செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (35). வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (30). இவர்களது குழந்தைகள் பாலாஜி (11), கௌசல்யா (7). இதில் பாலாஜி சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.பள்ளி விடுமுறை என்பதால் வீட்டருகே உள்ள மாரியம்மன் கோயில் திடலில் திங்கள்கிழமை நண்பகலில் விளையாடச் சென்ற பாலாஜி, மாலை வரை வீடு திரும்பவில்லை. பெற்றோரும் உறவினர்களும் பாலாஜியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தங்கதுரையின் உறவினர்கள் சுப்பிரமணி, பூமா உள்ளிட்டோர் பாலாஜியின் புகைப்படத்துடன் ரயில் நிலையம் பகுதியில் தேடினர்.

அப்போது ரயில் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த இரு இளைஞர்கள், கொஞ்சம் செலவு செய்யத் தயாராக இருந்தால் காணாமல் போன சிறுவனை உள்ளூரிலேயே மீட்டுவிடலாம் என்று பூமாவிடம் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும்தான் பாலாஜியை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று எண்ணிய உறவினர்கள், இருவரையும் பிடித்து தாக்கத் தொடங்கினர்.அப்போது அங்கு வந்த ஒரு இளம் பெண், 2 இளைஞர்கள் உள்ளிட்ட மேலும் மூவரையும், பாலாஜியின் உறவினர்கள் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். பின்னர் 5 பேர்களும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர்களிடம் இருந்து பாலாஜியைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Advertisement

அதே நேரம் தங்கதுரையின் வீட்டருகே உள்ள திறந்தவெளி கிணற்றில் சிறுவன் விழுந்திருக்கலாம் என்று கருதிய உறவினர்கள், இது தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரவு முழுவதும் தேடிய நிலையில் பாலாஜியின் உடல், செவ்வாய்க்கிழமை காலை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.இதையடுத்து சிறுவனை யாரோ கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டதாக தகவல் பரவியதை அடுத்து ஊர் பொதுமக்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் பள்ளப்பட்டி பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலாஜியின் சாவில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏராளமானோரின் உயிரைப் பலி வாங்கியுள்ள திறந்த வெளிக் கிணறை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் உதவி கமிஷனர்கள் சந்திரசேகரன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.இதற்கிடையே விளையாடச் சென்ற மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருப்பதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.