ஸ்ரீவிலி. யில் ஒன்னறை அடி உயரம் உள்ள விலைமதிப்பற்ற அபூர்வ ருத்ராட்சம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவலிங்கம் உருவம் கொண்ட ஒன்னறை அடி உயரம் உள்ள விலைமதிப்பற்ற ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு அபூர்வ ருத்ராட்சங்களை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவலிங்கம் உருவம் கொண்ட ஒன்னறை அடி உயரம் உள்ள விலைமதிப்பற்ற ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு அபூர்வ ருத்ராட்சங்களை வழக்குரைஞர் ஒருவர் பாதுகாத்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் எஸ்.மகேஸ்வரன்.
இவர் கிருஷ்ணன்கோவிலில் அன்னை ஸ்ரீகாயத்ரி தியான பீடம் வைத்துள்ளார். இங்கு இமயமலை உள்ளிட்ட பகுதியில் மட்டுமே வளரும் ரூத்ராட்ச மரம் ஒன்றை வளர்த்து வருகிறார்.
தற்போது இவருக்கு நேபாளம் மற்றும் இந்தோனேசியாவில் மட்டுமே கிடைக்கும் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை அபூர்வமாக காய்க்கும் ருத்ராட்சம் கிடைத்துள்ளது. இது குறித்து வியாழக்கிழமை மாலை அவர் கூறியதாவது:
சிவலிங்கம் மீது மக்களுக்கு பற்று அதிகமாக உள்ளது. சிவனுடைய கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் துளியே ருத்ராட்சம் என்பார்கள். ருத்ராட்சம் 1 முகம் முதல் 21 முகம் வரையுள்ளது. இதில் ஒரு முகம் கிடைப்பது அரிதாகும். தற்போது ஒரு முகம் உள்ள ருத்ராட்சத்தில் உலக அதிசயம் போன்று ஒன்னறை அடி, ஒன்றே கால் அடி, ஒரு அடி மற்றும் முக்கால் அடியில் சிவலிங்கம் வடிவில் ஏகமுகமாக அமைந்து கிடைத்துள்ளது. மேலும் கௌரி சங்கரம், திரிவேணி அம்சம், சூரியகலை, சந்திரகலை உள்ளிட்ட வடிவங்களிலும் ஆக 8 அபூர்வ ருத்ராட்சங்கள் கிடைத்துள்ளது. இது சில வட இந்திய பக்தர்கள் தங்களால் பாதுகாக்க இயலவில்லை எனக் கூறி என்னிடம் கொடுத்துள்ளார்கள். இதுபோன்ற அபூர்வ ருத்ராட்சத்தை பார்ப்பதே புண்ணியம் என்று நினைக்கும் இக் காலத்தில், வரும் தைப்பூசத்தன்று கிருஷ்ணன்கோவில் உள்ள தியான பீடத்தில் பக்தர்களின் தரிசனத்திற்கு இதனை வைக்க உள்ளேன் என்றார்.
இதனை பாதுகாப்பது மிகவும் கடினம். ஆண்டிற்கு ஒரு முறை தூய்மையான வேப்பம் எண்ணெய் கொண்டு பூசி பாதுகாக்க வேண்டும்.
தற்போது என்னிடம் உள்ள பரிசுத்தமான வெள்ளி, செம்பு, பித்தளை குடங்களின் மேல் இதனை வைத்து, இதற்கென பிரத்யேகமாக தேக்கு மரத்தில் கண்ணாடி கூண்டு அமைத்து அதில் வைத்துள்ளேன். எப்படி லிங்கத்தை ஆவடையில் வைத்து போற்றுவார்களோ, அதுபோன்று இதற்கு 5 ஆவடைகள் பஞ்சலோகம் அல்லது வெள்ளியில் செய்ய சுமார் ரூ.20 லட்சம் ஆகும் என்றார் மகேஸ்வரன்.