ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் தணிக்கைக் குழு கைப்பற்றும்: தேர்தல் அலுவலர்
இடைத் தேர்தல் நடைபெறும் ஏற்காடு தொகுதிக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் சென்றால் அதை, தணிக்கைக் குழு அதிகாரிகள் கைப்பற்றுவார்கள் என்று மாவட்டத்
இடைத் தேர்தல் நடைபெறும் ஏற்காடு தொகுதிக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் சென்றால் அதை, தணிக்கைக் குழு அதிகாரிகள் கைப்பற்றுவார்கள் என்று மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மகரபூஷணம் எச்சரித்துள்ளார்.
இடைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய திட்டங்கள் தொடங்குவது, இலவசங்கள் வழங்குவது, வாக்குக்கு பணம் அளிப்பது போன்ற முறைகேடுகளைக் கண்டறிவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், வேட்பாளர்கள், அவரது முகவர்கள், பொதுமக்கள் ஆகியோர் தாங்கள் எடுத்துச் செல்லும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
வாகனத் தணிக்கையின்போது ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேலும் தொகையை எடுத்துச் சென்றால் அது வாக்காளரை முறையற்ற விதத்தில் தூண்டும் நோக்கில் எடுத்து செல்வதாகக் கருதப்படும். எனவே, எடுத்துச் செல்லும் பணத்துக்கு தகுந்த ஆவண, ஆதாரங்களை தணிக்கை அலுவலர்களின் சோதனையின்போது காண்பித்து தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அவ்வாறு எடுத்துச் செல்லும் பணத்துக்கு தகுந்த முகாந்திரம் இல்லை என்றால், அவை தணிக்கைக் குழுவால் கைப்பற்றப்படும் என க.மகரபூஷணம் எச்சரித்துள்ளார்.
Advertisement