முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி வங்கி கிளையில் தீவிபத்து: 5 பெண்கள் உள்பட 20 பேர் மீட்பு

ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள எஸ்.வி. வணிக வளாகத்தில் 3 மாடிகள் உள்ளன.இதில் தரை தளத்தில் மின்சார பொருள்கள் கிடங்கும், முதல் தளத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாஙகூர் கிளை அலுவலகமும், இரண்டாவது தளத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலுவலகமும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:25 PM
பகிர்:

புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் கிளை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் வங்கி வளாகம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள எஸ்.வி. வணிக வளாகத்தில் 3 மாடிகள் உள்ளன.இதில் தரை தளத்தில் மின்சார பொருள்கள் கிடங்கும், முதல் தளத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாஙகூர் கிளை அலுவலகமும், இரண்டாவது தளத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலுவலகமும், மூன்றாவது தளத்தில் தனியார் ஆர்க்கிடெக்ட் நிறுவனமும் உள்ளது.

இந்நிலையில் வங்கிக் கிளை அலுவலகத்தில் மேலாளர் குமாரசாமி மற்றும் 8 ஊழியர்கள் வழக்கம் போல் காலை 9.15 மணிக்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஏ.சி. இயந்திரத்தின் கருவி திடீரென வெடித்ததால் தீப்பற்றிக் கொண்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்து விட்டு இரண்டாவது தளத்துக்கு சென்று விட்டனர். அப்போது மூன்றாவது தளத்தில் 12 ஊழியர்கள் பணியில் இருந்தனர்.

தகவல் கிடைத்ததும் புதுவை தீயணைப்பு நிலைய அலுவலர் ரிதோஷ் சந்திரா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.

காவல்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீஸôரும், தீயணைப்புத்துறையினரும் மேலே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எஸ்.ஜி. சஜித் தலைமையில் போலீஸôரும், தீயணைப்பு வீரர்களும் தீயணைப்புத் துறை ஏணி மூலம் இரண்டாவது மாடியில் இருந்து பக்கத்து கட்டடத்தின் வழியாக 5 பெண்கள் உள்பட 20 பேரை பத்திரமாக மீட்டனர்.

அதற்குள் வங்கி வளாகத்தில் தீ மளமளவென பரவியதால் கூடுதலாக தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. இரண்டாவது தளத்திலும், மூன்றாவது தளத்திலும் தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

திருக்கனூர், கோரிமேடு, வில்லியனூர், புதுச்சேரி, காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 தீயணைப்பு வண்டிகள் 30 நடைகள் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தன.

3 மணி நேரம் போராட்டம்

ஏறக்குறைய பிற்பகல் 12.30 மணிவரை மூன்று மணி நேரம் 50-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் அலுவலகம் முற்றிலும் எரிந்து விட்டது. வங்கி வளாகத்திலேயே இருந்த ஏடிஎம் மையமும் பலத்த சேதமடைந்தது.

வங்கியின் உள்ள பாதுகாப்பு பெட்டகங்களுக்கு சேதமடைந்தனவா என கண்டறிய முடியவில்லை. தீ விபத்து நடைபெற்ற பகுதி பரபரப்பான போக்குவரத்து மிக்க பகுதி என்பதால் அதிகளவில் கூட்டம் கூடி விட்டது. பின்னர் போலீஸôர் அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

இதுகுறித்து உதவிக் கோட்ட தீயணைப்பு அலுவலர் இளங்கோ கூறியதாவது:

மூர்த்தி நகர், டி நகர் மேல்நிலை நீர்த் தொட்டிகளில் இருந்து மொத்தம் 1 லட்சம் லிட்டர் அளவுக்கு நீரைக் கொண்டு தீயை அணைத்தோம். வங்கி வளாகம் முழுவதும் எரிந்து விட்டது. சேதமதிப்பு தெரியவில்லை. போலீஸார் ஒத்துழைப்புடன் தீயை அணைத்தோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.