சிதம்பரம் : மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் தம்பதி பலி
சிதம்பரம் அருகே புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது, டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிதம்பரம் அருகே புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது, டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் அருகே உள்ள கம்பளிமேடு கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (40). இவரது மனைவி தேன்மொழி (35). பெரியப்பட்டு அருகே தீர்த்தனகிரியில் வசிக்கும் கனகராஜின் அக்காள் மகன் வினோத் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது துக்கத்திற்கு கனகராஜ் மற்றும் அவரது மனைவி தேன்மொழி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே எதிரே ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்தில் சிக்கி கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்து நடைபெற்றவுடன் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கி இறந்து போனவர்கள் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.