சிதம்பரம் ஓமக்குளத்தில் கழிவுநீர் தொட்டிகள்! குளம் தூர்வாருவதில் சிக்கல்
பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள 12 குளங்களை தூர்வாரும் பணியில் இறங்கினர். முதல் கட்டமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்து
நடராஜர் கோயில் தீர்த்தங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஓமக்குளத்தில் வீடுகளின் கழிவுநீர் தொட்டிகள் (SEPTIC TANKS) 12 அமைக்கப்பட்டுள்ளது. குளக்கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு மாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் குளத்தை தூர்வாருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுக்கும் வகையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள 12 குளங்களை தூர்வாரும் பணியில் இறங்கினர். முதல் கட்டமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள அண்ணாகுளம், யானைகுளம், ஓமக்குளம், இளமையாக்கினார் கோயில் குளம், தில்லையம்மன்கோயில் குளம் ஆகியவற்றை தூர்வாரும் பணியில் இறங்கினர். இதற்கு தொண்டு நிறுவனங்கள், சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு ஆதரவாக பணியில் ஈடுபட முன்வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆக.3-ம் தேதி உதவிஆட்சியர் (பொறுப்பு) பாதாளம், குளம் தூர்வாரும் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் 90 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்டு நகரில் உள்ள குளங்களை தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. எனவே தூர்வாரும் பணியை மீண்டும் தொடர அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர். இதனையடுத்து சிதம்பரம் ஓமக்குளத்தை தூர்வார அனுமதி வழங்கி முதல்வரின் தனிப்பிரிவினர் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்புகுழுத் தலைவர் மு.செங்குட்டுவன் தெரிவித்ததாவது:
அறுபத்துநாயன்மார்களில் ஒருவரான நந்தனார் 8 கிணறுகளை வெட்டி, அந்த குளத்தில் ஹோமம் செய்து, இறைவனடி சேர்ந்ததாக வரலாறு கூறுகிறது. இச்சிறப்பு வாய்ந்த ஓமக்குளம் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. குளக்கரையில் கட்டப்பட்டுள்ள மாடி வீடுகளின் கழிவுநீர் குளத்தில் செப்டிக் டேங்க் கட்டப்பட்டு அதில் கொண்டு வந்து விடப்படுகின்றன. மொத்தம் 12 கழிவுநீர் தொட்டிகள் குளத்திலேயே அமைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து மனித கழிவுகள் வழிந்து குளத்தில் குட்டை போல் தேங்கி சுகாதா சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் குளத்தின் தெற்குகரை பகுதியில் சுமார் 60 அடி தூரத்திற்கு தூர்வார இயலவில்லை. மேலும் ஓமக்குளத்தில் மாடு வீடுகள் கட்டவும், கழிவுநீர் தொட்டி அமைக்கவும் நகராட்சி எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்கிறார் மு.செங்குட்டுவன். எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஓமக்குளத்தில் உள்ள கழிப்பறை மற்றும் செப்டிக் டேங்குகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என சமூகஆர்வலர்களும், இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.