முகப்பு
தற்போதைய செய்திகள்

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர் ஜெயலலிதா: அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பார் என தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பார் என தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வரவேற்றார். மாநில மீனவரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.கலைமணி தலைமை வகித்தார். கடலூர் (மேற்கு) மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுபட்ட வாக்காளர்களை அதிமுக நிர்வாகிகள் கண்டறிந்து சேர்க்க வேண்டும். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி சாதி ரீதியான தொகுதி என கூறுகிறார்கள். ஆனால் இங்குள்ள மக்கள் நல்லவர்களாக உள்ளனர். தமிழக முதல்வர் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பவர். உலகத்தில் உள்ள, குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என கூறுகின்றனர். எனவே தமிழகத்தில் நாம் 40 தொகுதிகளும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில் 'சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற அனைவரும் கடுமையாக பாடுபட வேண்டும்' என தெரிவித்தார். கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), செல்விராமஜெயம் (புவனகிரி) உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிதம்பரம் தொகுதி செயலாளர் பி.எஸ்.அருள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.