முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் தில்லையம்மன்கோயில் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்

இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தில்லையம்மன்கோயில் குளம் தூர்வாரும் பணி புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தில்லையம்மன்கோயில் குளம் தூர்வாரும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுக்கும் வகையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள 12 குளங்களை தூர்வாரும் பணியில் இறங்கினர். முதல் கட்டமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள அண்ணாகுளம், யானைகுளம், ஓமக்குளம், இளமையாக்கினார் கோயில் குளம்  ஆகியவற்றை தூர்வாரும் பணியில் இறங்கினர். இதற்கு தொண்டு நிறுவனங்கள், சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு ஆதரவாக பணியில் ஈடுபட முன்வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆக.3-ம் தேதி அப்போது உதவிஆட்சியர் பொறுப்பில் இருந்த பாதாளம், குளங்கள் தூர்வாரும் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் 90 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்டு நகரில் உள்ள குளங்களை தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. எனவே தூர்வாரும் பணியை மீண்டும் தொடர அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் எம்.செங்குட்டுவன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.

இதனையடுத்து சிதம்பரம் குளங்களை தூர்வார அனுமதி வழங்கி முதல்வரின் தனிப்பிரிவு கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்ததது. இதனையடுத்து இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் மீண்டும் சிதம்பரம் ஓமக்குளம் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை சிதம்பரம் ஓமக்குளத்தில் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த காலத்தில் 13-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட 13 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கேணி 2-ம், 17-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட 20 அடிக்கு மேல் விட்டம் கொண்ட செங்கல் கேணிகள்- 4 ஆகியவை திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லையம்மன்கோயில் குளம் தூர்வாரும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் செயல்அலுவலர் க.முருகன், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், நாச்சியப்பன். தில்லைராஜன், செல்வி, ஜெயம், லட்சுமி, நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் குமரேசன், வர்த்தகர் சங்கத் தலைவர் டி.டி.கே.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.