எதிர்கால மத்திய மாநில அரசுகளின் நல்லுறவை விரும்பியே மோடியை ஜெயலலிதா விமர்சிப்பதில்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்
எதிர்காலத்தில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமையும்போது, மாநில அரசுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கு, என்ற காரணத்தாலும், மத்திய மாநில அரசுகளின் நல்லுறவை விரும்பியுமே மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்யவில்லை என்று கூறினார் கோவை பாஜக வேட்பாளரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன்.

இன்று கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த அவர், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மதிமுகவைச் சேர்ந்த ஆர்.ஆர்.மோகன் குமார், பாஜகவின் டி.கே.செல்வகுமார், நந்தகுமார் ஆகியோர் உடன் வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், மிஷன் 272ஐ விட அதிக இடங்களை பாஜக பெறும். முதல்வர் ஜெயலலிதா, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை விமர்சிப்பதில்லை, ஏன் என்று கேட்கிறார்கள். உண்மையில், கடந்த 3 வருடமாக, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுடன் ஒவ்வொரு விஷயத்திலும் ஜெயலலிதா போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு அனுபவம் இருக்கிறது. எதிர்காலத் திட்டங்களை மனதில் வைத்துக் கொண்டே அவர் மோடியை விமர்சிப்பதில்லை.
மின்மிகை மாநிலங்களில் இருந்து, மின்சாரம் பெற்று, நம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க வேண்டும். அதற்கு, மின் வழித் தடங்கள் அமைக்கப் பட்டு, மின்சாரம் சரி சமமாகப் பங்கிட வேண்டும். மேலும், தேசிய அளவில் நதிகள் இணைக்கப்பட்டு நீர் பற்றாக்குறை போக்கப் பட வேண்டும். இது போல் பல நலத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை. அதற்கு மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று கூறினார் சி.பி.ராதாகிருஷ்ணன்.