முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

Updated On : 5 ஏப்ரல், 2014 at 12:41 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

பதியான பகவான் ஸ்ரீவடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் சயனத் திருக்கோலத்தில் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்ய தேசம். இத்தலத்தில் ஸ்ரீபெரியாழ்வாரின் திருமகளாய், பூமிப் பிராட்டியாய் ஸ்ரீஆண்டாள் அவதரித்தார். அவர் தம் தந்தையைப் போலவே வடபெருங்கோவிலுடையானிடம் ஆழ்ந்த பக்தியுடையவராய் திகழ்ந்தார். திருப்பாவை என்னும் பாமாலையும், பூமாலையும் சூடிக் கொடுத்தார். ஒரு நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழியையும் அருளிச்செய்தார். மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் என உறுதிகொண்டார்.

ஸ்ரீஆண்டாளின் பக்தியைக் கண்ட திருவரங்கத்து எம்பெருமான் இத்தலத்துக்கு எழுந்தருளி பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீஆண்டாளை திருமணம் செய்தருளி, இன்றும் இச்சன்னதியில் ஸ்ரீஆண்டாளுடன், ஸ்ரீகெருடாழ்வாருடனும், ஸ்ரீரெங்கமன்னார் என்கிற திருநாமத்தோடு சம ஆசனத்தில் திருக்கல்யாணக் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

Advertisement

தயார் ஸ்ரீஆண்டாளின் திருக்கலாயண மகோத்ஸவம் சனிக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

12 திருநாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9-ம் திருநாளான 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

உற்சவ நாட்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சா.ராமராஜா ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.