ஒரே நேரத்தில் 5 கட்சி தலைமையுடன் கூட்டணி பேசியவர்கள் ராமதாஸ், விஜயகாந்த்: பண்ருட்டி தி.வேல்முருகன்
பணத்திற்காகவும், எம்பி பதவிக்காகவும் ஒரே நேரத்தில் 5 கட்சிகளின் தலைமையுடன் கூட்டணி பேசியவர்கள் ராமதாஸூம், விஜயகாந்தும் ஆவார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.
பணத்திற்காகவும், எம்பி பதவிக்காகவும் ஒரே நேரத்தில் 5 கட்சிகளின் தலைமையுடன் கூட்டணி பேசியவர்கள் ராமதாஸூம், விஜயகாந்தும் ஆவார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.
சிதம்பத்தில் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முடிவுண்ணன் தலைமை வகித்தார். மூத்தநகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியது: இலங்கையில் தமிழனத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை கொன்றதற்கும், இந்து கோயில்களை இடித்து தள்ளியதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கும், அதற்கு துணைபோன திமுகவிற்கும் தண்டிப்பதற்காக அதிமுகவுடன், தமிழக வாழ்வுரிமை கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கையான சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அமைச்சரவை கூட்டி, வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகரமான முடிவு எடுத்த ஜெயலலிதாவை நான் புரட்சித்தலைவி என்றழைக்கிறேன். அதிமுகவை ஆதரிக்கிறேன். தமிழகத்தில் ராணுவ பயிற்சி அளித்த இலங்கை ராணுவத்தினரை 24 நேரத்திற்கு வெளியேற வேண்டும். இல்லையெனில் தமிழக காவல்துறை மூலம் வெளியேற்றுவோம் எனக்கூறி இலங்கை ராணுவத்தை வெளியேற்றியதற்காக அதிமுகவை ஆதரிக்கிறோம். காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தை அணுகி, மத்தியஅரசிதழில் வெளியிட்டு காவிரி உரிமையை பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.
தேசிய கட்சிகளுடன், திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் எனக்கூறி கடந்த 6 மாதங்களாக மாம்பழத்திற்கு வாக்கு கேட்டு வந்த ராமதாஸ், தனது மகன் அன்புமணிக்கு எம்பி பதவிக்காக, திராவிட கட்சியான தேமுதிக, தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். குடிகாரகுப்பன் என கூறிய ராமதாஸ், அதே விஜயகாந்திடம் கூட்டணி வைத்துள்ளார். குடுகுடுப்பைக்காரன் எனகூறிய பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாய். இதனை எந்த வன்னியரும் மன்னிக்கமாட்டான்.
சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளராக மாற்றியமைக்கப்பட்ட மணிரத்தினம், பாமகவில் சேர்ந்து 5 நிமிடத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன் என கூறுகிறார். பெட்டி வாங்கிக்கொண்டு வேட்பாளரை அறிவித்தீர்கள். கட்சிக்கு அங்கீகாரம் இல்லை என்பதே தெரியாமல், கட்சி நடத்துகிறீர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளீர்கள். அதனால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இது கேவலமாக இல்லையா. அடுத்து சில நிமிடத்தில் அவரது மனைவி சுதா வேட்பாளராக அறிவித்துள்ளீர்கள். அப்போது கட்சியில் வேறு வேட்பாளரை நிறுத்த வேண்டாமா? திருமாவளவனை கட்டிப்பிடித்து கைகோர்த்து, இணைந்த கைகளை யாராலும் பிரிக்க முடியாது என்று சொன்ன ராமதாஸ், இன்று கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளார்கள் எனக்கூறி, வன்னிய இளைஞர்களை தூண்டி விடுகிறார். கூட்டணியில் இருந்தால் போய்விட்டால் திருமாவளவன் எதிரி. அதற்காக அப்பாவி வன்னிய இளைஞர்கள் போராட வேண்டும், சிறைக்கு செல்ல வேண்டுமா?. பாமகவில் 6 பேர்தான் போட்டியிடுகின்றனர். அதிமுகவில் 8 வன்னியர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். முக்கியத்துறைகளை வழங்கி 2 வது இடத்தில் ஒரு வன்னியரை அமைச்சராக நியமித்து அழகு பார்ப்பவர் ஜெயலலிதா என தி.வேல்முருகன் தெரிவித்தார்.
கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, செல்விராமஜெயம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச்செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன், அமைப்புச் செயலாளர் கொற்றவன் மூர்த்தி, மாநில நிர்வாகிகள் பாலகுருசாமி, எஸ்.கே.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஜி.தமிழ், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், இலக்கிய அணி பிரிவு செயலாளர் சொ.ஜவகர், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.