பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் முடிவு
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடையே தெரிவித்தது:
மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. சாதி, மதம் வேறுபாடின்றி செயல்படும் எங்கள் இயக்கம், தொலைநோக்கு பார்வையுடன் இனி பாரதிய ஜனதா கட்சிதான் நாட்டை வழிநடத்த தகுதியுள்ளது என்ற நம்பிக்கையை கொண்டுள்ளது. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குஜராத்தில் நர்மதை நதியை 17 வறண்ட ஆறுகளுடன் இணைந்து, அனைத்தையும் ஜீவநதியாக மாற்றியுள்ளார்.
குஜராத்தில் மது இல்லை. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் மதுவினால் இளைஞர்கள் எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றனர். தமிழகத்தை ஆண்டு வரும் இரு திராவிட கட்சிகளும் வறுமையை சுமக்கும் மக்களாக, தமிழக மக்களை ஆக்கியுள்ளனர். மின்தட்டுப்பாட்டினால் தமிழகம் இருண்டுள்ளது. தொழில் மற்றும் விவசாயம் சீரழியும் நிலையில் உள்ளது.
குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அந்த நிலை இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும் என்றால் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும். நதிநீர் இணைப்பு, மதுஒழிப்பு, இலவசக்கல்வி, விவசாயத்தை செழிக்க வைக்க நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் முழு மனதோடு ஆதரவு அளிக்கின்றது என எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்தார்.