இந்தியாவிலேயே மக்களுக்காக தொண்டாற்றக்கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான்: தொல் திருமாவளவன்
இந்தியாவிலேயே மக்களுக்காக தொண்டாற்றக்கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான் என சிதம்பரத்தில் வியாழக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே மக்களுக்காக தொண்டாற்றக்கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான் என சிதம்பரத்தில் வியாழக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
கூட்டத்தில் திருமாவளவன் பேசியது: கருணாநிதி சிதம்பரம் நகருக்கு வருகை தந்துள்ளார். நடராஜப் பெருமானை தரிசிப்பதற்காக அல்ல. நந்தனின் வாரிசை வாழ்த்துவதற்காக வந்துள்ளார். எனக்கு மோதிரம் சின்னத்தில் வாக்கு கேட்டு வந்துள்ளார். மோதிரம் என்பது கணையாழி என்றழைக்கப்படும். கருணாநிதி தனது கையில் அணிந்துள்ள கணையாழி, பேரறிஞர் அண்ணா அணிவித்த கணையாழி. முதன் முதலாக தேர்தலில் திமுக போட்டியிட்ட போது. சொன்னதை சொன்னபடி வெற்றியை ஈட்டிக்காட்டியதால் சென்னை மெரினா கடற்கரையில் சீரணி அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா, கருணாநிதிக்கு அணிவித்தது இந்த கணையாழி.
இந்த 90 வயது கடந்த நிலையில் ஊர், ஊராய் பயணம். ஓய்வு எடுக்க வேண்டிய வயதிலேயே ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்து, லட்சக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார். இங்கே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். 60 வயதை கடந்தவர் வான் வழியை பறந்து வருகிறார். 90 வயதை கடந்தவர் சாலைவழியே பயணித்து வருகிறார் என்று. இதிலிருந்து யார் மக்கள் தலைவர், மக்கள நலனில் அக்கறை கொண்ட தலைவர் யார் என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும், உடன்பிறப்புகளை காண வேண்டும் என சுற்றுப்பயணம் செய்கிறார். மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களின் பிரசாரம் போதாதா? கூட்டணி தலைவர்களின் பிரசாரம் போதாது. ஆனால் மக்களின் மீது அக்கரை உள்ள தலைவர் கருணாநிதி என்பதால் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஏன் இந்த அக்கரை, இந்தியாவிற்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது. நாட்டு மக்களுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து இந்திய தேசத்தை காப்பாற்றியாக வேண்டும். இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர், ஓடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என பொதுக்குழுவை கூட்டி அறிவித்தவர் கருணாநிதி. அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என கருணாநிதி நினைத்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம். கூட்டணியில் சேரலாம், வெற்றி பெறலாம், அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் நாட்டு மக்களை காப்பாற்ற மோடியுடன் கூட்டணி சேராத, கருணாநிதி சாமானியர்களிடன் கூட்டணி வைத்துள்ளார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும். அடுத்த பிரதமர் யார் என்பதை கருணாநிதி முடிவு செய்வார் என திருமாவளவன் தெரிவித்தார்.