முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமாவளவன் வெற்றிக்கு இருமடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சிதம்பரம் தொகுதியில் நாங்கள் யாருக்கும் உள்வேலை பார்க்கவில்லை. திருமாவளவன் வெற்றிக்கு, விடுதலைச் சிறுத்தைகளை விட இருமடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். வதந்திகளை நம்ப வேண்டாம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

சிதம்பரம் தொகுதியில் நாங்கள் யாருக்கும் உள்வேலை பார்க்கவில்லை. திருமாவளவன் வெற்றிக்கு, விடுதலைச் சிறுத்தைகளை விட இருமடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். வதந்திகளை நம்ப வேண்டாம் என கடலூர் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிதம்பரம் வடக்குமெயின்ரோட்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்ததினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது சிலைக்கு மாலை அணிவித்து பேசினார். அவர் பேசியதாவது:

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடிமகனான அம்பேத்கருக்கு இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய பெருமை உண்டு. அவரது புகழை மக்கள் மறக்காமல் இருக்க கருணாநிதி், அம்பேத்கருக்கு மணி மண்படம் அமைத்தார். இவரது பிறந்தநாளில் கொள்கைவாதியான திருமாவளவன் வெற்றி பெறச்செய்ய அனைவரும் பணியாற்ற வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நான் சிதம்பரம் தொகுதியில் உள்வேலை பார்ப்பதாக கூறுகின்றனர். சீதையையே சந்தேகித்த நாடு இது. நாங்கள் திருமாவளவன் வெற்றிக்கு முழு ஆதரவோடு, உணர்வோடு செயல்படுவோம் என உறுதி கூறுகிறோம். எங்களுக்கு பதவி தந்தவர் கருணாநிதி. அக்கட்சி கொள்கைக்கு துரோகம் செய்ய மாட்டோம். கொள்கை மாறுவது எங்களுக்கு பிடிக்காது. குணிந்திருந்த தலித் சமுதாயத்தை நிமிர்ந்து நிற்க வைத்தவர் திருமாவளவன். கொள்கை பிடிப்புள்ள அவரை நாம் வெற்றிப் பெறச்செய்ய வேண்டும். வேட்பாளர் கொள்கை பிடிப்பு உடையவர் யார் என்பதை மக்களுக்கு பிரசாரம் மூலம் எடுத்துரைக்க வேண்டும்.

அதிமுக தோற்பது உறுதி என்பதற்கு கடும் மின்வெட்டு ஒன்றே போதும். 1996 தேர்தலில் இருந்த எழுச்சி, தற்போது இந்த தேர்தலில் உள்ளது. இங்கு போட்டியிடும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பாமக வேட்பாளர் நேற்று வரை காங்கிரஸில் இருந்து சமுதாயத்தை தூக்கிவிடுவதாக நடைபயணம் சென்றார். ஆனால் சீட் கிடைக்கவில்லை என்பதால், அச்சமுதாயத்திற்கு துரோகம் செய்து வன்னியராக மாறி பாமகவில் இணைந்துவிட்டார். ரியல் எஸ்டேட் நடத்துவதில் பல்வேறு வழக்குகள் உள்ளதால், பாதுகாத்து கொள்ள எம்பி என்ற கேடயம் வேண்டும் என போட்டியிடுகிறார். எனவே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் மக்களிடம் அதிக மதிப்பெண்கள் வாங்கி வெற்றி பெறப்போவது திருமாவளவன்தான் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் ரா.மாமல்லன், தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசு, மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், நிர்வாகிகள் ரா.காவியச்செல்வன், பாலஅறவாழி, நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.