முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பணம் கேட்டு கடத்தப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர் கொலை

சிதம்பரம் கோவிந்தசாமிதெருவில் ஒரு வீட்டின் மாடியில் வசிப்பவர் கந்தசாமி. அண்ணாமலைப் பல்கலையில் செக்யூரிட்டியாக பணியாற்றும் இவரது மகன் சூரியபிரகாஷ் (16) சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

சிதம்பரத்தில் பணம் கேட்டு கட்டத்தப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு கடைக்குள் சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்டு கிடந்தார்.

சிதம்பரம் கோவிந்தசாமிதெருவில் ஒரு வீட்டின் மாடியில் வசிப்பவர் கந்தசாமி. அண்ணாமலைப் பல்கலையில் செக்யூரிட்டியாக பணியாற்றும் இவரது மகன் சூரியபிரகாஷ் (16) சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை சூரியபிரகாஷ் சைக்கிளில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வீட்டு முன்பு சைக்கிளை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் அம்மாணவரை காணவில்லை. மாணவரை தேடி பார்த்த அவரது பெற்றோர், செல்போனில் சூரியபிரகாஷை தொடர்பு கொண்டனர். அப்போது வேறு நபர் செல்போனை எடு்த்து ரூ.25 லட்சம் பணம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம் எனக்கூறி துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கந்தசாமி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாணவர் சூரியபிரகாஷ் வீட்டின் கீழ்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்தார். வாடை அடித்ததாலும், ரத்தம் கடையிலிருந்து வெளியேறியதால் சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் கடையை திறந்து பார்த்து போது இச்சம்பவம் தெரியவந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை திறந்து மாணவர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் மாணவர் சூரியபிரகாஷ் வசிக்கும் கீழ்வீட்டில் குடியிருக்கும் ஜவகர்பாபு (32), அவரது மனைவி ஆரவள்ளி ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்விரோதம் காரணமாக மாணவர் சூரியபிரகாஷை, கீழ்வீட்டில் வசிக்கும் ஜவகர்பாபு கொலை செய்து, தனது கடைக்கு சாக்குமூட்டையில் வைத்து பூட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஜவகர்பாபு, பகலில் ஆட்டோ ஓட்டுகிறார். இரவில் வீட்டின் அருகாமையில் பரோட்டா கடை நடத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்தவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ

மாணவர் சூரியபிரகாஷ் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில் மாணவர் சூரியபிரகாஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை அவரது பெற்றோரால் தாங்க முடியாத துயரமாகும். எனவே கொலை குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.