பழனி அருகே மணல், மண் கடத்திய மாட்டுவண்டி, லாரி பிடிப்பு
பழனியை சுற்றியுள்ள ஆற்றுப்படுகைகளிலும், வாய்க்கால்களிலும் அரசு அனுமதியில்லாமல் மணல், மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய் துறையினருக்கு வந்த புகாரைத் தொடர்ந்து
பழனி அருகே மண் மற்றும் மணல் கடத்தி வந்த மாட்டுவண்டிகள், லாரி வருவாய் துறையினரால் பிடிக்கப்பட்டது.
பழனியை சுற்றியுள்ள ஆற்றுப்படுகைகளிலும், வாய்க்கால்களிலும் அரசு அனுமதியில்லாமல் மணல், மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய் துறையினருக்கு வந்த புகாரைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் வருவாய் அலுவலர்கள் தீவிர சோதனைப் பணி மேற்கொண்டனர். பாப்பம்பட்டி அருகே வருவாய் அலுவலர் உஷா, கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை ஆகியோர் வாகன தணிக்கை மேற்கொண்ட போது காவலப்பட்டி பகுதியில் இருந்து அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரி பிடிக்கப்பட்டது.
அதே போல வண்டிவாய்க்கால் பகுதியில் வருவாய் அலுவலர் மணி, கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி ஆகியோர் மேற்கொண்ட சோதனையில் ஐந்து மாட்டு வண்டிகளில் நெய்க்காரபட்டி பகுதியில் இருந்து அனுமதி ஏதும் இன்றி மணல் கொண்டு வந்தது தெரியவந்தது. மேற்கண்ட வாகனங்களை பழனி தாலுகா போலீஸார் உதவியுடன் வருவாய் துறையினர் பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர். பழனி கோட்டாட்சியர் உத்திரவின் பேரில் மாட்டு வண்டிகளுக்கு தலா ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும், லாரிக்கு ரூபாயை இருபத்தையாயிரமும் விதிக்கப்பட்டது.