தாக்கப்பட்ட தலைமைக்காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு திடீர் மாற்றம்!
சிதம்பரம் அண்ணாமலைநகரில் வாகன தணிக்கையின் போது கடந்த ஜூலை 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு தாக்கப்பட்டு காயமடைந்த தலைமைக்காவலர் சிவக்கொழுந்து, கடலூர் மாவட்ட காவல்துறை
சிதம்பரம் அண்ணாமலைநகரில் வாகன தணிக்கையின் போது கடந்த ஜூலை 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு தாக்கப்பட்டு காயமடைந்த தலைமைக்காவலர் சிவக்கொழுந்து, கடலூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தலைமைக்காவலர் சிவக்கொழுந்து ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு முத்தையாநகர் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த உசூப்பூரைச் சேர்ந்த கெளதம் (23) என்ற வாலிபரை நிறுத்தி வாகன உரிமம், காப்பீடு சான்றுகளை கேட்டனர். அப்போது அவ்வாலிபர் வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்ல முயன்ற போது, அவரை தடுத்த தலைமைக்காவலர் சிவக்கொழுந்துவை தாக்கியுள்ளார். இதில் தலைமைக்காவலர் சிவக்கொழுந்துவின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து புகார் அளிக்க மறுத்ததால், தலைமைக்காவலர் சிவக்கொழுந்துவை கடலூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்ரண்டன் ராதிகா உத்தரவிட்டுள்ளார்.