முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியருகே தேக்குமரம், வேலிக்கல் திருடிய கும்பல் கைது: ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

பழனியை அடுத்த ஆயக்குடி, கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி பகுதியில் உள்ள தோட்டங்களில் காட்டுயானை பயம் காரணமாக விவசாயிகள் இரவு நேரங்களில் செல்ல பயந்து வந்தனர்.  இதனால் கடந்த

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:03 AM
பகிர்:

பழனி அருகே தேக்குமரம், வேலிக்கல் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டது.  அவர்களிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்குமரம், வேலிக்கல், பேட்டரிகள் கைப்பற்றப்பட்டது.

பழனியை அடுத்த ஆயக்குடி, கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி பகுதியில் உள்ள தோட்டங்களில் காட்டுயானை பயம் காரணமாக விவசாயிகள் இரவு நேரங்களில் செல்ல பயந்து வந்தனர்.  இதனால் கடந்த சில மாதங்களாக தோட்டங்களில் இருந்த வயர்கள், மோட்டார்கள், சோலார் பேட்டரிகள் திருடு போய்வந்தது.  இதுகுறித்து ஆயக்குடி போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.  கணக்கன்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் கருப்புச்சாமி(35) என்பவருக்கு சொந்தமான தோட்டம் கோம்பைப்பட்டியை அடுத்த மலைக்கரடி அடிவாரத்தில் உள்ளது.  இங்கு வனவிலங்கு உள்ளே வராமல் இருக்க போடப்பட்டிருந்த சோலார் பேட்டரி மற்றும் சார்ஜரை வெள்ளிக்கிழமை இரவு இருநபர்கள் திருடியுள்ளனர்.  அவர்களை கையும், களவுமாக பிடித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவர்கள் பழைய ஆயக்குடி பெரும்பாறை காலனியை சேர்ந்த மயில்சாமி மகன் சக்திவேல்(30), மருதகாளி மகன் கருப்புச்சாமி(24) என்று தெரியவந்தது.  விசாரணையில் அவர்கள் கருப்புச்சாமி தோட்டம் மட்டுமன்றி கணக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சுந்தரமூர்த்தி(27) என்பவர் தோட்டத்தில் இருந்து 14 வேலிக்கற்கள், நாச்சிமுத்து மகன் பிரபாகரன்(40) தோட்டத்தில் இருந்த மூன்று தேக்குமரங்களை வெட்டியதும் தெரியவந்தது.  இவர்கள் திருடிய தோட்டங்களும் மலையடிவாரப்பகுதிகளிலேயே உள்ளது.  மேலும் இவர்கள் பல்வேறு பகுதிகளில் பேட்டரிகள், சோலார் சார்ஜர்கள், மோட்டார்களை திருடியது தெரியவந்தது. 

மேலும், பிடிபட்ட நபர்களின் தகவலின் பேரில் திருட்டுக்கு உதவியாக இருந்த புதுஆயக்குடியை சேர்ந்த காமாட்சி மகன் கருப்புச்சாமி(35), பழைய ஆயக்குடி பெரும்பாறை காலனியை சேர்ந்த சிவசுப்பிரமணி மகன் முத்துக்கிருஷ்ணன்(23), ரமேஷ் மகன் பொன்ராஜ்(18), தாமோதரன் மகன் செல்வராஜ்(38) ஆகியோரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.  இவர்களிடம் இருந்து சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள வேலிக்கற்கள், தேக்குமரத்துண்டுகள், பேட்டரிகள், சோலார் சார்ஜர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த சம்பவத்தால் சனிக்கிழமை இரவு ஆயக்குடி காவல் நிலையத்தை ஏராளமான விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.