முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை அரசின் மீதான இந்தியஅரசின் கொள்கையை மாற்றி அமைக்க முன்வர வேண்டும்: பெ.மணியரசன்

இலங்கை அரசு தொடர்பான இந்திய அரசின் கொள்கையை மாற்றி அமைக்கவும், சுப்பிரமணியசாமியை இந்திய-இலங்கை பேச்சுவார்த்தையிலிருந்து விடுவிக்கவும் இந்தியா முன் வரவேண்டும் என தமிழ்த்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:03 AM
பகிர்:

இலங்கை அரசு தொடர்பான இந்திய அரசின் கொள்கையை மாற்றி அமைக்கவும், சுப்பிரமணியசாமியை இந்திய-இலங்கை பேச்சுவார்த்தையிலிருந்து விடுவிக்கவும் இந்தியா முன் வரவேண்டும் என தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மீனவர்களை அன்றாடம் கைது செய்து, அவர்களின் மீன்களைக் கொள்ளையிட்டு வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் மீது நடவடிக்கை எடுத்து  இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறார். இதனை கொச்சைப்படுத்தும் வகையில், தரக்குறைவாக படங்கள் போட்டும் வசனங்கள் எழுதியும் ஒரு கட்டுரையை இலங்கை அரசின் ராணுவத்துறை இணையதளம் வெளியிட்டுள்ளது. சிங்கள அரசின் இந்த சின்னத்தனமான பண்பாட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்  கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சிங்கள ஆளும் வர்க்கத்தினர் எந்த அளவு பண்பு கெட்ட மனநிலையில் உள்ளார்கள்  என்பதற்கும், தமிழினத்தை இழிவுபடுத்தும் அதன் இனவெறி இன்னும் அடங்கவில்லை என்பதற்கும் மேற்படி கட்டுரை ஒர் எடுத்துக்காட்டு. கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை இலங்கை சென்று இனஅழிப்புப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளையும், தமிழ்மக்களையும் சந்தித்த பின் இலங்கை அரசு குறித்து ஆக்கப்பூர்வமான சில திறனாய்வுகளைக் கூறினார். அதற்காக இராசபட்சே தலைமையில் உள்ள ஓர் அமைச்சர் நவிப்பிள்ளை இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் சம்மதித்தால் நான் அவரைத் திருமணம் செய்துகொள்கிறேன்  என்று கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டு, தனது கீழ்த்தர மனநிலையைக் காட்டிக்கொண்டார். இலங்கையில் ஆளும் சிங்கள் அரசு திருந்தும்படி உலக நாடுகள் உருப்படியான நடவடிக்கை எடுக்காததால் அவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய அரசு, இராசபட்சே அரசுடன் மிகவும் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளத் தீவிரமாக முனைந்துள்ளது. இந்திய- இலங்கை உறவுகளை வளர்க்கும் தூதுவர்களாக  சுப்பிரமணியசாமி, சேசாத்திரிசாரி இருவரையும் நரேந்திரமோடி அமர்த்தியிருப்பது புதிய மத்தியஅரசின் சிங்கள ஆதரவுப் போக்கின் தீவிரத்தைக் காட்டுகிறது. இதனால் ஊக்கம் அடைந்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் தங்களின் இராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர், பிரதமர் அவர்களுக்கு, எழுதும் அலுவல் வழிப்பட்ட கடிதங்களைக் கொச்சைப்படுத்தி குதூகலிக்கிறார்கள்.

இந்தியஅரசு தனது தீவிரமான சிங்கள ஆதரவுப் போக்கைக் கைவிட்டு, தமிழ் இனம், தனது பகை இனம் இல்லை என்ற புதிய முடிவுக்கு வந்தால் ஒழிய, சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் தமிழினப் பகைச் செயல்களும், தமிழக முதல்வரை இழிவுப்படுத்தும் வன்மமும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவே இந்திய அரசு புதிய முடிவுகளுக்கு வர தமிழக மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் இது என அறிக்கையில் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.