சமூகநீதிக் கொள்கையை முதலில் முன்மொழிந்தவர் சேக்கிழார்: நாஞ்சில் சம்பத்
சிதம்பரத்தில் தமிழ்ப் பேரவை சார்பில் கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் ஆக.2,3 ஆகிய இருநாட்கள் தெய்வச் சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழா நடைபெற்றது. 2-ம் நாள் நிகழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை
சமூகநீதிக் கொள்கையை முதலில் முன்மொழிந்தவர் தெய்வச் சேக்கிழார் ஆவார் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் தமிழ்ப் பேரவை சார்பில் கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் ஆக.2,3 ஆகிய இருநாட்கள் தெய்வச் சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழா நடைபெற்றது. 2-ம் நாள் நிகழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று "தீதும், நன்றும் பிறர் தரவாரா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அவர் பேசியதாவது:
தமிழ் தேசிய வரலாற்றை அங்கீகரித்து, ஆராதித்தவர் சேக்கிழார். சிலப்பதிகாரத்திற்கு பிறகு சேக்கிழார் தந்த பெரியபுராணம்தான் தமிழ் தேசிய காப்பியமாக திகழ்கிறது. தற்போது தமிழுக்கு விழா எடுக்கும் சபைகள் நலிந்து விட்டது. பேசுவதற்கு யாரும் வரமாட்டார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழ் சொற்பொழிவாற்றும் எனக்கு கடமை ஏற்பட்டுள்ளது. அரசியல் பொழிவாளரான என்னை இலக்கிய மேடைக்கு வர வேண்டிய தாக்கத்தை சிறுவயதிலேயே விதைத்தவர் சுதந்திர போராட்ட சொற்பொழிவாளர் ஜீவாதான். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாட்டு வரலாற்றில் தமிழர்களின் அடையாளத்தையும், வீர, தீர செயல்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பெரியபுராணத்தை தவிர வேறு எந்த நூலும் இல்லை.
சிலப்பதிகாரத்தை 10 நாட்கள் சொற்பொழிவாற்றியுள்ளேன். இங்கு 10 நாட்கள் பத்துபாட்டும், 8 நாட்கள் எட்டுத்தொகையும், 5 நாட்கள் அகநாநூறும் சொற்பொழிவாற்ற எண்ணியுள்ளேன். அதில் பெரியபுராணமும் ஒன்று. தமிழ் இலக்கியங்கள் அணைத்தையும் தொடர்ந்து சொறிபொழிவாற்றும் பணி செய்ய வேண்டும் என்ற தாகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. முற்காலத்தில் தமிழ்விழா என்றால், சங்க இலக்கியத்திற்கு ஒருநாள் ஒதுக்கிவிடுவார்கள். தற்போது சங்க இலக்கியங்களை ஒதுக்கிவிட்டார்கள். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வந்ததற்கு பிறகுதான் சங்க இலக்கியம் மீண்டும் துளிர்க்க தொடங்கியது. திராவிட இயக்கங்களால் சங்க இலக்கியத்தின் மான்பு தெரியவந்தது. இதில் அண்ணாவின் பங்கு மிகப்பெரிய பங்காகும்.
தற்போது தமிழ் திரை இசை உலகில் கொடி கட்டி பறக்கும் கவிஞர்கள் எழுதிய திரைப்பட பாடல்கள் அனைத்தும் சங்க இலக்கியங்களில் திருடிதான் எழுதியுள்ளனர். சாகா வரம் பெற்ற சங்க இலக்கியங்கள்தான் தமிழர்களின் அகத்தையும், புறத்தையும் படம் பிடித்து தந்தது. தமிழர்களின் வீர வரலாறு என்று சொன்னால், சங்க இலக்கியம் படித்தால்தான் தெரியவரும். சங்க கால புலவரான கணியன் பூங்குன்றனார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமரசத்திற்கு இடம் கொடுக்காத சமூகத்தை பார்த்து யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற பாடலை எழுதியுள்ளார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டுவாசியாக ஆடை உடுத்தாமல் இருந்தாலும் நாகரீகத்துடன் இருந்தான். சுதந்திரமாக இருந்தான். இன்று நாட்டுவாசியாக மாறிய பின்னர் விதவிதமான உடைகளை அணிந்து நாகரீகத்தையும், சுதந்திரத்தையும் இழந்துளோம்.
எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் எம் உறவினரே என்ற மனோபாவம் வந்துவிட்டால் உலகில் சண்டை சச்சரவே இருக்காது. சேக்கிழார், கம்பன், வள்ளுவன் ஆகியோர் தங்களது காப்பியத்தில் உலகை முதல்வரியில் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். இது உலகத்தின் வழிகாட்டியாக நாங்கள் திகழ்கிறோம் என்பதை காட்டுகிறது. கணியன் பூங்குன்றனார் தனது பாடலில் நன்மை, தீமை அடுத்தவரால் வருவதில்லை. நம்மால்தான் வருகிறது என்கிறார். நன்மை செய்தால், நன்மை வரும், தீமை செய்தால் தீமை வரும் என்கிறார் புலவர். பிரபஞ்சம் தொடங்கிய காலத்திலிருந்து மரணம் தொடருகிறது. உலகில் மரணம் மட்டும்தான் உறுதியானது. எனவே பெரியவரை கண்டு வியக்காதீர், சிறியவரை இகழாதீர் என பூங்குன்றனார் ஒரே பாடலில் வழிகாட்டியுள்ளார்.
மது குடிப்பது, சிகரெட் குடிப்பது தீமை என தெரிந்தும் குடிப்பதால், தீங்கு ஏற்படுகிறது. அதற்கு அரசு காரணமாகாது? சண்டை, சச்சரவால் பிளவு பட்டு கிடக்கும் மனித சமுதாயத்தினை வழிகாட்டும் பெருமை உலக இலங்கியங்களில், தமிழ் இலக்கியத்திற்கு மட்டும்தான் உண்டு. எனவே சங்க இலக்கியங்களை தெரிந்து கொள்வதை விட, தெளிந்து கொண்டால் சகிப்பு தன்மை, சமாதானம் நம்மோடு கைகோர்த்துவிடும். சங்க இலக்கியங்களை வீடு தோறும் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உள்ளது. எனவே அனைவரும் பாடலை பாடாவிடிலும், பொருளை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
விழாவிற்கு பேராசிரியர் அழ.பழனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்ப் பேரவைத் தலைவர் ராம.ஆதிமூலம் வரவேற்றார். ஆனந்தநடராஜ தீட்சிதர், மூசா, நாக.முருகுமாறன் எம்எல்ஏ, அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில் ஆதி.சிவராமவீரப்பன் நன்றி கூறினார். முதல் நாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர், பேராசிரியர் மு.சிவச்சந்திரன், முனைவர் ரா.அன்பழகன், புலவர் தி.பொன்னம்பலம், புலவர் பனசைமூர்த்தி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.