அண்ணாமலைப் பல்கலையில் ராக்கிங் கிடையாது: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் ராக்கிங் கிடையாது. இருப்பினும் ராக்கிங் குறித்து கண்காணிக்க ஒவ்வொரு வகுப்பிற்கும் தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மாணவ, மாணவியர்கள்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் ராக்கிங் கிடையாது. இருப்பினும் ராக்கிங் குறித்து கண்காணிக்க ஒவ்வொரு வகுப்பிற்கும் தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மாணவ, மாணவியர்கள் புகார் தெரிவிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கு 11,647 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதி பெற்ற மாணவர்கள் 11,002 பேர் ஆவார்கள். ஆக.14,15,16 தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வில் 2014-15 கல்வி ஆண்டில் பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 944 பேர் அனுமதி சேர்க்கை பெற்றுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் 2014-15 ஆண்டிற்கான பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பதிவாளர் என்.பஞ்சநதம் தலைமை வகித்தார். வேளாண்புல முதல்வர் முனைவர் ஜே.வசந்தகுமார் வரவேற்றார். பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகு, அனைத்து மாணவ, மாணவியர்களும் எங்களது பிள்ளைகளாவார். எனவே பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். வேளாண்துறையில் மாணவர்களை விட மாணவியர்கள் அதிகளவில் அனுமதி சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த கல்வியாண்டில் 65 சதவீத மாணவியர்கள் (567 மாணவியர்கள்) அனுமதி சேர்க்கை பெற்றுள்ளனர். எனவே பல்கலைக்கழக வளாகத்தில் டெக்பார்க் அருகே உள்ள மாணவர் விடுதியை மாற்றம் செய்து, வேளாண்புல முதலாம் ஆண்டு மாணவியர்களுக்கு தனி புதிய விடுதி ஒரிரு மாதத்தில் அமைக்கப்படும் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
விழாவில் பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், புல முதல்வர்கள் செ.வேலுசாமி (பொறியியல்), ஆர்.ராஜேந்திரன் (கலை), கே.கதிரேசன் (கடல் அறிவியல்), திருவள்ளுவன் (இந்திய மொழிப்புலம்), பெற்றோர்கள் சார்பில் சன்முகம் (தென்காசி), பாலசுப்பிரமணியன் (தருமபுரி) உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில் உதவிப் பேராசிரியர் கந்தசாமி நன்றி கூறினார்.