பள்ளி வாசல்களில் ஒலிபெருக்கி வைக்கக்கூடாது என்ற உத்தரவை ஏற்க முடியாது: காதர்மொகிதீன்
பள்ளி வாசல்களில் பாங்க் ஒதுவதற்கு சட்டரீதியான அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளை அனுமதி கொடுக்க மாட்டோம் என்ற மும்பை, தில்லை நீதிமன்றங்களின் உத்தரவை ஏற்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லீக்
பள்ளி வாசல்களில் பாங்க் ஒதுவதற்கு சட்டரீதியான அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளை அனுமதி கொடுக்க மாட்டோம் என்ற மும்பை, தில்லை நீதிமன்றங்களின் உத்தரவை ஏற்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லீக் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் இந்திய யூனியன் லீக் கடலூர் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.ஏ.அமானுல்லாஹ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சுக்கூர் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள 32 ரெவின்யூ மாவட்டங்களில், முஸ்லீக் லீக் கட்சியில் 42 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 52 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்க முடிவு செய்துள்ளோம். அதுபோன்று 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தொகுதி செயலாளர், துணைச் செயலாளர் நியமிக்கப்படுவார்கள். ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம், கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்படும். அனைத்து சமுதாயத்தினரின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி அணிந்து சென்றவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழக சட்டப்பேரவையில் வேட்டி அணிந்து செல்வதை தடுத்தால் ஒராண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் என முதல்வர் சட்டத்தை இயற்றியுள்ளோர்.
அதேபோல் முஸ்லீம் பெண்கள் குர்தா போடாதே என கூறுவதை நாங்கள் அங்கீகரிக்க முடியாது. எங்களது கலாச்சாரத்தின் படி ஒலிபெருக்கி மூலம் பாங்க் ஒதுவதை அனுமதிக்க முடியாது என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இதற்காக கட்சியை பலப்படுத்தி போராட தயாராக வேண்டும். உபியில் அதிகளவு முஸ்லீம்கள் வசித்து வந்தும் ஒரு எம்பிக்கள் கூட கிடையாது. கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லீக் வளர்ச்சி பெற்று ஒவ்வொரு முறையில் 2 எம்பிக்களை தேர்வு செய்து வருகிறோம். அதுபோன்று தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் 234 தொகுதிகளில், 38 சட்டப்பேரவை தொகுதிகளில் 25 சதவீதத்திற்கு மேலான முஸ்லீம்கள் வாழுகின்றனர். எனவே மேற்கண்ட தொகுதிகளில் பூத்கமிட்டி அமைத்து பணியாற்ற வேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என காதர் மொகிதீன் தெரிவித்தார்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் கே.எம்.அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், காயிதே மில்லத் பேரவை சர்வதேச செயலாளரும், முன்னாள் எம்பியுமான எம்.அப்துல்ரஹ்மான், மாநில துணைத் தலைவர் ஷபிகுர்ரஹ்மான், மாவட்டப் பொருளாலர் டி.அப்துல் கப்பார்கான் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.