பணி நிரந்தரம் செய்யக்கோரி, நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கண்டன பேரணி
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறர்கள். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, 20
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நெய்வேலியில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கண்டன பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறர்கள். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, 20 சதவீதம் போனஸ், பணி நிரந்தரம் செய்யும் வரையில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் பணி நிரந்தரம் செய்யப்படாததால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த மாதம் 10-ந் தேதி மந்தாரக்குப்பத்தில் தர்ணா போராட்டமும், 26-ந் தேதி நெய்வேலி ஸ்கியூ பாலம் அருகே உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே என்.எல்.சி. நிர்வாகம் முதற்கட்டமாக 200 ஒப்பந்த தொழிலாளர்களை மட்டும் பணிநிரந்தரம் செய்வதற்கான நேர்காணல் பட்டியலை வெளியிட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தொழிற்சங்கத்தினர், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலியில் கண்டன பேரணி நடத்தினர். என்.எல்.சி. மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலிலிருந்து பேரணி புறப்பட்டது. அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் ராமஉதயகுமார் தலைமை வகித்தார். பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் திலகர், சி.ஐ.டி.யூ. சங்க தலைவர்கள் வேல்முருகன், ஜெயராமன், சினுவாசன், ஐ.என்.டி.யூ.சி. சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யூ. பாட்டாளி தொழிற்சங்கம், பி.எம்.எஸ்., தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐ.என்.டி.யூ.சி. தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், எச்.எம்.எஸ் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
தலைமை அலுவலகத்திற்குள் செல்ல முயன்றி பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தி அனைவரும் உள்ளே செல்ல முடியாது முக்கிய நிர்வாகிகள் மட்டுமே செல்லமுடியும் என்றனர். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகள் 24 பேர் மட்டும் தனி பேருந்து மூலம் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நிர்வாகிகள் முதன்மை பொது மேலாளர் முத்துவை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் உயர்அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.