பழனியருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி: இருவர் படுகாயம்
தூத்துக்குடியில் இருந்து பேப்பர் வேஸ்ட் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்றுள்ளது. லாரியை தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா கொக்கரக்குடியை சேர்ந்த மாணிக்கம்
பழனி அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விழுந்ததில் இருவர் படுகாயமடைந்தனர். லாரியில் லிப்ட் கேட்டு வந்தவர் பலியானார்.
தூத்துக்குடியில் இருந்து பேப்பர் வேஸ்ட் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்றுள்ளது. லாரியை தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா கொக்கரக்குடியை சேர்ந்த மாணிக்கம்(33) என்பவர் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். லாரியில் கிளீனராக அதே ஊரை சேர்ந்த பரமசிவம்(33) உடன் வந்துள்ளார். மாணிக்கத்தின் உறவினர் பெருமாள் மகன் சிவானந்தபெருமாள்(37). இவர் கேரள மாநிலம் கொச்சியில் தனியார் ஹோட்டலில் மாஸ்டராக வேலைபார்த்து வந்துள்ளார். இவர் கொச்சி செல்லயிருந்த நிலையில் லாரி பொள்ளாச்சி செல்வதால் பொள்ளாச்சி வரை லாரியில் வருவதாக கூறி அவர்களுடன் லாரியில் பயணம் செய்துள்ளார். லாரி வியாழக்கிழமை பழனி பைபாஸ் சாலையில் ராமநாதநகர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சிவானந்தபெருமாள் சம்பவ இடத்திலேயே நசுங்கி இறந்து போனார். மாணிக்கம், பரமசிவம் ஆகியோர் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இறந்து போன சிவானந்த பெருமாளுக்கு திருமணமாகி மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளார். சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் போலீஸார், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.